பதவியை ராஜினாமா செய்வதாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே முடிவு!

ஆசிரியர் - Admin
பதவியை ராஜினாமா செய்வதாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே முடிவு!

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து 2019 மார்ச் இறுதிக்குள் வெளியேற பிரிட்டன் அரசு முடிவு செய்தது. ஆனால், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை அந்நாட்டு எம்.பி.க்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் 3 முறை பெருவாரியான ஓட்டுவித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆளும் பழமைவாத கட்சி உறுப்பினர்களே தெரசா மே ஏற்படுத்திய ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை ஆதரிக்காத நிலையில் முன்னர் சில மந்திரிகள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.     

இதனால் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டுவந்துள்ள தெரசா மே, அடுத்த மாதம் (ஜூன்) 3-ந் தேதி நான்காவது முறையாக அந்த ஒப்பந்தத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளார். இந்த ஓட்டெடுப்பும் தோல்வியில் முடிந்தால், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து ஒப்பந்தம் இன்றி வெளியேற வேண்டிய நெருக்கடி நிலைக்கு இங்கிலாந்து தள்ளப்படும்.

இந்த நிலையில், பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான தெரசா மேயின் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கட்சியை சேர்ந்த மூத்த பெண் மந்திரி ஆண்ட்ரியா லீட்ஸம் தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். பிரதமர் பதவி மற்றும் ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்து தெரசா மே விலக வேண்டும் என்ற எதிர்ப்பு குரல் தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில், பழமைவாத (கனசர்வேட்டிவ்) கட்சி தலைவர் பதவியை ஜூன் மாதம் 7-ம் தேதி ராஜினாமா செய்வதாக தெரசா மே அறிவித்துள்ளார்.

லண்டன் நகரில் டவுனிங் தெருவில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ‘பிரிட்டன் நாட்டின் பிரதமராக இருமுறை பணியாற்ற கிடைத்த வாய்ப்பை எனது வாழ்நாளின் கவுரவமாக கருதுகிறேன். எவ்வித கவலையும் இல்லாமல் நன்றியுணர்வோடு விடைபெற விரும்புகிறேன்’ என கண்ணீர் மல்க குறிப்பிட்டார். கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமர் பதவியில் நீடிப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு