மட்டக்களப்பு மாவட்ட புதிய அரச அதிபர் நாளை நியமனம்!
மட்டக்களப்ப மாவட்ட அரச அதிபர் நியமனம் நாளை இடம்பெறுமென உள்நாட்டலுவல்கள் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தெரிவித்தார். இருப்பினும் அவர் அரச அதிபர் பதவிக்கு தெரிவாகியிருப்பவரின் பெயரை வெளியிட மறுத்துவிட்டார்.
மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக இருந்த திருமதி சாள்ஸ் இடமாற்றலாகி சென்றதன் பின்னர் நிரந்தர அரச அதிபர் பதவி காலியாகவே இருந்துவருகிறது. இப்பதவியின் நியமனத்திற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதி உச்ச நிர்வாகசேவைத் தராதரம் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கே. பாஸ்கரன், எஸ்.மகேசன், ஆர்.உதயகுமார் ஆகியோரை தெரிவு செய்து அதில் ஒருவரை நியமிக்குமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவை கேட்டிருந்தது. இதனிடையில் இதே தரத்திலும் இப்பட்டியலுக்கு அப்பாலும் உள்ளவர் இந்நியமனத்தைப்பெற சிற்சில செல்வாக்கினை பிரயோகித்தமையால் இந்நியமனத்தில் இழுபறிநிலை ஏற்பட்டு தாமதமடைய காரணமாகிவிட்டது.
இதுபற்றி மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆளும் கட்சி அமைப்பாளரும், ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட தலைவருமான எஸ்.கணேசமூர்த்தி கருத்து வெளி யிடுகையில் அமைச்சர் வஜிர, இவர்களில் யாரோ ஒருவரை நியமிக்க இறுதித் தீரமானம் எடுக்கின்ற வேளைகளில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குறுக்கிட்டுள்ளார்கள். அதற்கு மட்டக்களப்பின் சில சங்கங்கள் காரணமாயிருந்துள்ளன. இச்செயற்பாடு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஆரோக்கியமானதல்ல. இது பல பிரச்சினைகளை இம்மாவட்டத்தில் தோற்றுவிக்கும் என்ற கருத்து மக்கள் மத்தியில் பதிவாகியுள்ளது. இதனை யாராலும் தவிர்க்க முடியாது. இம் மூவருள் தரத்திலும், சேவை மூப்பிலும் முதன்மையாக பாஸ்கரனே இருக்கிறார். அவர் அரச அதிபராக வருவதை மாவட்ட மக்கள் விரும்புகின்றனர். அவரே நியமிக்கப்படவேண்டும் என்ற தனது சிபாரிசையும் தான் அமைச்சரிடம் வழங்கியுள்ளதாக கூறினார்.