700 வெளிநாட்டு அகதி குடும்பங்களை வவுனியாவில் குடியமர்த்த நடவடிக்கை! - சிவசக்தி ஆனந்தன் கண்டனம்
இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டு குடும்பங்களை வவுனியாவில் தங்க வைக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு சிவசக்தி ஆனந்தன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். எழுநூறு வெளிநாட்டுப் பிரஜைகளை வவுனியாவில் தங்க வைப்பதற்கான செயற்பாட்டை மீள் பரிசீலனை செய்யவேண்டும் என அவர் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
'கடந்த ஞாயிற்றுக்கிழமைஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும், ஹோட்டல்களிலும் நடத்தப்பட்ட தற்கொலை பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து கொழும்பில் இராணுவமும் காவல்துறையும் பல தேடுதல் வேட்டைகளில் ஈடுபட்டு பலர் இன்றுவரை கைது செய்யப்பட்டுக் கொண்டும் இருக்கின்றனர்.
அந்த வகையில் கொழும்பில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பிரஜைகளை அவர்களின் பாதுகாப்பு கருதி வவுனியாவில் தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தற்போது இருக்கும் பூந்தோட்டம் கூட்டுறவு கட்டிடம், செட்டிகுளம் மெனிக்பாம் மற்றும் பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் அமைந்துள்ள அரச கட்டிடம் போன்ற பகுதிகளில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அறிகின்றேன்.
வெளிநாட்டு பிரஜைகள் அகதிகளாக இருந்தால் அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் இவர்களை அணுக வேண்டும் என்பது மறுப்பதற்கில்லை.
ஆனால் தற்போது நாட்டில் நிலவியுள்ள அசாதாரண சூழ்நிலையின்போது இங்கே இவர்கள தங்க வைப்பது என்பது இப்பிரதேச மக்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பங்களையும் அச்ச உணர்வை ஏற்படுத்துவதாகவே அமையும். நீண்ட கால யுத்தத்திற்கு பின்னர் மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர் போன்ற பல பிரச்சினைகளுக்கு வடக்கு கிழக்கு மக்கள் முகம் கொடுத்து வருகின்றார்கள். இந்தநிலையில் வெளிநாட்டுப் பிரஜைகளை இங்கு தங்க வைப்பது என்பது பொருத்தமற்ற செயற்பாடு ஆகும்.
எனவே யுத்தம் நடைபெற்ற வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் இவர்களை தங்க வைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். இந்த விடயம் ஜனாதிபதி, பிரதம மந்திாி ஆகியோாின் கவனத்திற்கும் கொணடுவரப்பட்டிருக்கிறது“ என தெரிவித்தார்.
சிரியா, பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த அகதிகள் காலி, நீர்கொழும்பு பகுதிகளில் தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். எனினும், அண்மையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலை தொடர்ந்து நீர்கொழும்பில் அகதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்கள் பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பு கோரி தஞ்சமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அகதிகளின் பாதுகாப்பு கருதி வவுனியாவில் தங்க வைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.