குளிர்கால ஒலிம்பிக்ஸ்: தென் கொரியாவுக்கு குழுவை அனுப்புகிறது வட கொரியா
தென்கொரியாவில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள 2018-ஆம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள தங்கள் நாட்டுக் குழு ஒன்று அனுப்பப்படும் என்று வடகொரியா அறிவித்துள்ளது.
விளையாட்டு வீரர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் அக்குழுவில் இடம் பெற்றிருப்பார்கள் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்நாடுகளுக்கு இடையே நடைபெற்ற உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தையின்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கொரியப் போரின்போது பிரிந்த குடும்பங்கள் மீண்டும் சந்திக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தென்கொரியா முன்மொழிந்துள்ளது.
இந்த விவகாரம் இரு நாடுகளிலும் உணர்வுப்பூர்வமான ஒன்றாக உள்ளது. பிரிந்த குடும்பங்கள் மீண்டும் சந்திக்கும் நிகழ்வுகள் அதிக அளவில் நடத்தப்பட வேண்டும் என்று தென்கொரியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இரு கொரிய தேசங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் இணைந்து அணிவகுப்பில் பங்கேற்கவேண்டும் என்றும் தென்கொரியா விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கு வடகொரியா எத்தகைய பதிலை அளித்தது என்பது இன்னும் அறியப்படவில்லை.
கடைசியாக, கடந்த2006-இல் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கொரிய தீபகற்பத்தின் கொடியுடன் இரு நாட்டு விளையாட்டு வீரர்களும் இணைந்து அணிவகுப்பு நடத்தினர்.
இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்திக்கொள்ள இந்தப் பேச்சுவார்தைகளை பயன்படுத்திக்கொள்வோம் என்று தென்கொரியா கூறியுள்ளது.
'அமைதி கிராமம்' எனப்படும், ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ள பன்முஞ்சோம் எனும் எல்லையோர கிராமத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
உயர் அதிகாரிகளின் குழு, தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் குழு, விளையாட்டு வீரர்கள், அவர்களின் ஆதரவாளர்கள், கலைஞர்கள், பார்வையாளர்கள், டேக்வாண்டோ குழு மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோரை அனுப்ப வடகொரியா விருப்பம் தெரிவித்துள்ளது," என்று கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய, ஒருங்கிணைப்புக்கான தென்கொரிய இணை அமைச்சர் சுன் ஹே-சங் தெரிவித்தார்.
ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தையும் நடத்தப்படவேண்டும் என்றும் தென்கொரியா முன்மொழிந்துள்ளது.
கடந்த 2015-இல் இரு நாடுகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்தைகளுக்குப் பிறகு, இருதரப்பு உறவுகள் தொடர்ந்து மோசமடைந்து வந்தன.
வட கொரியாவால் ஒரு ஏவுகணை செலுத்தப்பட்டது மற்றும் அணு ஆயுத சோதனை செய்யப்பட்டது, ஆகியவற்றுக்குப்பின், இரு நாடுகளும் இணைந்து செயல்படுத்தி வந்த கேசோங் தொழில் வளாகக் கட்டுமானத் திட்டத்தில் இருந்து தென்கொரியா விலக்கியது. அதன்பின் இருதரப்பு உறவுகள் முறிவடைந்தன.
இதைத் தொடர்ந்து தொலைபேசி இணைப்புகள் உள்பட, தென்கொரியாவுடனான அனைத்து விதமான தகவல் பரிமாற்றங்களையும் வடகொரியா துண்டித்துக்கொண்டது. தடை செய்யப்பட்ட அணு ஆயுதத் திட்டங்களை வடகொரியா தொடர்ந்து முன்னெடுத்து வந்ததால், அதற்குப் பிந்தைய ஆண்டுகளில் மோதல்நிலை அதிகரித்து வந்தது.