SuperTopAds

இலங்கையர் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்! -இராதாகிருஸ்ணன்

ஆசிரியர் - Admin
இலங்கையர் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்! -இராதாகிருஸ்ணன்

இலங்கையின் பொருளாதாரத்தை வீழ்த்துவதற்கும் மதங்களுக்கு இடையில் முறுகல் நிலையை ஏற்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்ட அடிப்படையில் ஒரு குழவினரால் முன்னெடுக்கப்பட்ட சம்பவமாகவே நேற்றைய தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை பார்க்க வேண்டியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையர் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய (21.04.2019) தினம் நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகள் தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்று நுவரெலியா காரியாலயத்தில் வைத்து கருத்து தெரிவிக்கின்ற பொழுதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்-

நேற்று நாட்டின் பல்வேறு இடங்களிலும் குண்டு வெடிப்பு சம்பவம் இடம் பெற்றுள்ளது. இதில் உயிரிழந்த குடும்பங்களுக்கும் அதே போல வெளிநாட்டவர்களுக்கும். எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்ளவதோடு இதனை வண்மையாக கண்டிக்கின்றேன். இதனை ஒரு மதத்திற்கோ அல்லது ஒரு இனத்திற்கோ நடந்த சம்பவமாக பார்க்க முடியாது எமது நாட்டிற்கு ஏற்பட்ட சம்பவமாகவே இதனை பார்க்க வேண்டும்.இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாகவும் இலங்கையர்கள் என்ற உணர்வுடனும் செயற்பட முன்வர வேண்டும்.

நேற்றைய நாள் கிறிஸ்தவர்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு நாளாகும் இயேசுநாதர் உயிர்த்த தினத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றமையானது மிகவும் கவலைக்குறிய ஒரு விடயமாகவே பார்க்க வேண்டியுள்ளது.இன்று சர்வதேச ரீதியாக எங்களுடைய நாடு நன்மதிப்பை பெற்று அனைவரும் ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு நிலையில் இவ்வாறான சம்பவங்கள் அதற்கு பாதிப்பாக அமையக்கூடாது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்கு நாம் முன்வர வேண்டும்.பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து வழிகளிலும் உதவிகளை செய்ய வேண்டும்.விசேடமாக இரத்த தானம் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அதனை வழங்கி ஒரு உயிரையேனும் காப்பாற்ற முடியுமாக இருந்தால் அது நாம் செய்கின்ற பெரிய புண்ணியமாக அமையும்.அத்தோடு சமூக வளைதளங்களில் பொய் வதந்திகளை பதிவிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.நாம் சமூக உணர்வுடனும் பொறுப்புள்ள இலங்கை பிரஜைகளாகவும் செயற்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.

அண்மையில் நியுசிலாந்து நாட்டில் ஏற்பட்ட துர்பாக்கிய சம்பவம் தொடர்பாக அந்த நாட்டின் ஊடகங்கள் மிகவும் பொறுப்பாக செயற்பட்டதை நாங்கள் காண முடிந்தது.அதே போல எங்களுடைய நாட்டின் ஊடகங்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதை நான் வினயமாக கேட்டுக் கொள்கின்றேன்.ஏனெனில் ஊடகங்களின் செயற்பாடுகள் ஒரு நாட்டின் ஒற்றுமைக்கு மிகவும் பக்க பலமாக அமையும் எனவே அவர்களின் செயற்பாடுகள் மிகவும் நேர்த்தியானதாக அமைய வேண்டும்.இதன் மூலமாக மதக்கலவரங்களை தூண்டுவதற்கு சிலர் முயற்சி செய்யலாம் அது தொடர்பாக நாம் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.

விசேடமாக உயிரிழந்த குடும்பங்களுக்கு நட்டஈடுகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதே நேரம் நாட்டின் பாதுகாப்பிற்கு நாம் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி எங்களுடைய பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.நேற்றை சம்பவத்தின் பொழுது பாதுகாப்பு தரப்பினர் செயற்பட்ட விதம் மிகவும் வரவேற்கக்கூடியதாகும்.அதே போல வைத்தியசாலைகளிலும் எவ்விதமான குறைபாடுகளும் இன்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதை ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டோம்.எனவே இவ்வாறான சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.