மீள நிகழாமையை உறுதிப்படுத்துமாறு ஆனந்தன் எம்.பி கோரிக்கை!
தேவாலயங்கள் உட்பட முக்கிய விடுதிகளில் தாக்குதல் நடத்திய ஈனச்செயல் கண்டத்துக்குரியது என தெரிவித்துள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் படுகொலைச் சதியின் பின்னணியில் உள்ள அனைவரும் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கத்தினை வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தர்மத்தை நிலைநாட்டுவதற்காக இப்புவிதனில் அவதரித்து காட்டிக்கொடுப்பினால் சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழுந்து தர்மத்தையும் நற்சிந்தனையையும் போதித்த இத்திருநாளாம் ஈஸ்டர் ஞாயிறன்று தமது ஆண்டவரை தரிசித்து ஆண்டவருக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளவும் தமது உள்ளக் கிடக்கைகளை அவரிடத்தில் சொல்லி பரிகாரம் தேடவும் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவ நண்பர்கள் 21.04.2019 ஞாயிறு அன்று காலை சிறப்பு ஆராதனைகளிலும் திருப்பலிகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
அவ்வேளையில் யாரும் எதிர்பாராத விதத்தில் கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு செபஸ்டியான் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு சியோன் தேவாலயம் ஆகியவற்றிலும் கொழும்பின் சுற்றுலாப்பயணிகளின் கேந்திரங்களாக விளங்கும் மூன்று பிரபல நட்சத்திர ஹோட்டல்களிலும், தெஹிவளை மற்றும் தெமட்டகொட ஆகிய இடங்களிலும் பாரிய குண்டுவெடிப்பு மற்றும் தற்கொலை தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
மேற்படி குண்டுவெடிப்பு சம்பவங்களில் பொதுமக்களும் காவல்துறையினரும் வெளிநாட்டிலிருந்து எமது நாட்டின் இயற்கை அழகை இரசிக்க வந்தவர்களும் என இருநூற்றுதொண்ணூறுக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்துள்ளதுடன், ஏராளமான கிறிஸ்தவ சகோதரர்கள் காயமுற்றுள்ளனர். இச்செய்தியைக் கேட்டதிலிருந்து நாம் பெரும் அதிர்ச்சியுற்றோம்.
என்ன காரணத்திற்காக இறக்கிறோம் என்பதே தெரியாமல் தங்கள் ஆண்டவர் உயிர்த்தெழுந்த தினத்தில் அதனைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் தருணத்தில் நொடிப்பொழுதில் மரணத்தைத் தழுவிய அந்த அப்பாவி மக்களை நினைக்கும்பொழுது நெஞ்சு பதைபதைக்கிறது.
உறவினர்கள் கண்ணீர் விட்டு அழும் காட்சி கல்நெஞ்சையும் கரைய வைக்கும். யாரால் யாருக்கு ஆறுதல் சொல்ல முடியும்? இறந்துபோன தமது உறவினர்களுக்காக அழுவதா? அல்லது காயமுற்ற உறவினர்களைக் காப்பதற்காகப் போராடுவதா என்று தெரியாமல் அல்லல்பட்டவர்கள் கண்முன்னே நிற்கிறார்கள். இந்த ஈனச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
உறவினர்களைப் பிரிந்து துடிக்கும் எமது உறவினர்களின் துயரத்தில் நாமும் பங்கு கொள்கிறோம். காயமுற்றவர்கள் அனைவரும் விரைவில் குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டுகிறோம். மரணம் கொடுமையானது. அந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது. தமது உறவினர்களையும் வாரிசுகளையும் இழந்து துடிப்பவர்களின் சோகம் சொல்லில் அடங்காதது. இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.
அத்துடன் இலங்கையின் கார்தினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் இருப்பவர்களை பாரபட்சமின்றி தண்டிக்கப்படவேண்டும் அதுவே இறந்த உயிர்களுக்கு செய்யும் பிராச்சித்தமாக இருக்க வேண்டும் என்று பகிரங்மாக கூறியுள்ள நிலையில் நாமும் அதனை வலியுறுத்தி நிற்பதோடு இந்த தாக்குதல் சதியின் பின்னணியில் இருக்கும் அனைவரையும் பகிரங்கப்படுத்தி உரிய உயர் தண்டனை வழங்கப்பட வேண்டும் . என்றும் மீண்டும் இத்தகைய சம்பவங்கள் நாட்டில் நடைபெறாமையை உறுதிப்படுத்துமாறும் அரசாங்கத்திடம்கோரிக்கை விடுக்கின்றோம் என்றுள்ளது.