சிவராம் கொலையின் முக்கிய சூத்திரதாரிகள் தமிழரசுக் கட்சியில் அடைக்கலம்
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகளாகவிருக்கும் துணை இராணுவக் குழுவான புளொட்டின் சார்பில் தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னத்தில் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் மாமனிதர் தராகி சிவராம் கொலையின் முக்கிய சூத்திரதாரிகள் இருவர் களமிறக்கபட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மண்முனை மேற்குப் பிரதேச சபைக்காக ஆறுமுகம் சிறிஸ்கந்தராஜா என்ற முழுப்பெயர் கொண்ட , பாவற்கொடிச்சேனை, உன்னிச்சையை முகவரியாகக் கொண்ட “பீற்றர்” என்பவரும் போட்டியிடுகிறார்.
இதேவேளை சுன்னாகம் பிரதேசசபைக்காக ஆர்.ஆர் எனப்படும் ஆர்.இராகவன் எனப்படும் முக்கிய நபரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் வெற்றிபெற்றால் பிரதேச சபை தலைவர் பதவிகள் வழங்கப்படுமென சித்தார்த்தனால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் தான் 29.04.2005 அன்று கொழும்பு பம்பலப்பிட்டியில் வைத்துக் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ‘தராகி’ என்ற மாமனிதர் திரு.தர்மரட்னம் சிவராம் படுகொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களாவர்.
அமரர் சிவராமுடன் இறுதியாக நின்றிருந்த “குசல்” என்ற அமரர் சிவராமின் சிங்கள நண்பரின் தகவலின் படி அவரைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டது “சில்வர் – கிறே” அல்லது சாம்பல் நிற டொயோட்டா சுவ் ரக வாகனமாகும்.
சிறி லங்காப் பொலிசாரினால் ஓப்புக்கு நடத்தப்பட்ட விசாரணைகளின் ஒரு கட்டத்தில் அமரர் சிவராம் பயன்படுத்திய கைத்தொலைபேசி இனங்காணப்பட்டது.
அதையடிப்படையாக வைத்து 11ஆம் திகதி ஜுன் மாதம் 2005 இல் கொழும்பில் ஒரு அலுவலகத்தைச் சுற்றி வளைத்தனர். அங்கு சந்தேக நபர்களான பீற்றர் என்று அழைக்கப்படும் ஆறுமுகம் சிறிஸ்கந்தராஜாவையும், வேலாயுதன்_நல்லநாதர் என்ற சந்தேக நபர்களைப் பொலிசார் கைது செய்தனர். இவர்களுள் ‘பீற்றர்’ சிறிஸ்கந்தராஜாவிடமிருந்து அமரர் சிவராமின் “சிம்” கைப்பற்றப்பட்டது.
அமரர் சிவராம் கடத்தப்படுவதற்குப் பயன்படுத்தப்பட்ட அதே வாகனமும் நிறுத்தி வைத்திருக்கக்கண்டு பிடிக்கப்பட்டது.
அந்த அலுவலகம் வேறெதுவுமல்ல ‘புளொட்’ தேச விரோத ஒட்டுக் குழுவின் தலைவர் சித்தார்த்தனின் கொழும்புத் தலைமையகமே அது. அந்த வாகனம் வேறு எவரினதுமல்ல சித்தார்த்தனின் தனிப்பட்ட பாவனையிலிருந்த வாகனமே அது. பீற்றரே அப்போதைய ‘புளொட்டின்’ கொழும்பு அமைப்பாளரும் சித்தார்த்தனின் பிரத்தியேக வாகனச் சாரதியுமாகவிருந்தார்.)
sivaram1980 களின் ஆரம்பத்தில் ‘புளொட்’ இயக்கத்தில் இணைந்த ‘பீற்றர்’ 1987இல் மாலைதீவுப் புரட்சியில் கைது செய்யப்பட்டு சிறி லங்கா அரசிடம் ஒப்படைக்கப்பட்டு ஐந்தரை ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டு விடுதலையானவர்.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட சந்தேக நபர்கள் மீது சட்ட மா அதிபரினால் குறறப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
‘பீற்றர்’ என்ற சிறிஸ்கந்தராஜா பொலிசாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் அமரர் சிவராம் கடத்தப்பட்ட அன்றைய மாலைநேரத்தில் தமது வாகனத்தை ஒருவர் இரவல் வாங்கியதாகவும் மறுநாள் ஒப்படைக்கப்பட்டதாகவும் அப்போது அந்நபர் தன்னிடம் ஒரு கைத்தொலைபேசியைக் கொடுத்து அதில் உள் வரும் அழைப்புகளை அவதானிக்குமாறு கூறியதாகவும், அது தனக்குக் கடத்தப்பட்ட சிவராமின் கைத்தொலைபேசியெனத் தெரியாது எனவும் விளக்கமளித்திருந்தார்.
‘புளொட்’ தேசவிரோத ஒட்டுக்குழு அரச புலனாய்வு பணியில் ஈடுபட்டிருந்தமையால் அமரர் சிவராம் கொலை வழக்குக் கிடப்பிலே போடப்பட்டு ‘பீற்றர்’ எப்போது விடுவிக்கப்பட்டாரென்றே வெளியில் தெரியாத வகையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்தக் கொலையுடன் தொடர்புடைய ஆர்.ஆர். எனப்படும் இராகவன் தற்போது சித்தார்த்தனின் எல்லாமுமாக உள்ளதுடன் கூட்டமைப்பு உயர்மட்ட பேச்சுக்களில் பங்கெடுத்தும் வருகின்றார்.அவரும் தற்போது சுன்னாகம் பிரதேசசபைக்காக களமிறக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே நாடுகடந்து வாழ்ந்த சில ஊடகவியலாளர்கள் மேற்குப் பத்திரிகையாளர் அமைப்பொன்றினூடாக தொடர்ந்து குரல் கொடுத்து எடுத்த முயற்சிகள் காரணமாக ஏழு வருடங்களின் பின்னர் 2012 ஜனவரியில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி பி.சுரசேனா முன்னிலையில் சிவராம் கொலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இரண்டு பொலிசார் உட்பட ஆறு சாட்சிகளுள் எவருமே மன்றுக்குச் சமூகமளித்திருக்கவில்லை.
இந்த வழக்கு அரசியல் மேலாதிக்கங்களால் தொடர்ந்தும் கிடப்பிலேயே இன்று வரை போடப்பட்டுள்ளது.