உலகிலேயே முதல் முறையாக தென்கொரியாவில் 5ஜி சேவை தொடக்கம்…!
உலகிலேயே முதல் முறையாக நாடு முழுவதும் 5ஜி சேவையை தென்கொரியா வழங்கத் தொடங்கியது. வெள்ளிக்கிழமை அன்று அங்கு 5ஜி சேவைகள் தொடங்கப்பட இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் நேற்றிரவே, தென்கொரியா முழுவதும் 5ஜி சேவை தொடங்கி வைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. எஸ்.கே.டெலிகாம், கே.டி., எல்ஜி யூபிளஸ் (SK Telecom, KT, and LG Uplus) ஆகிய நிறுவனங்கள் இச்சேவையை வழங்குகின்றன.
அமெரிக்காவின் வெரிசோன் நிறுவனம், 5ஜி சேவையை அந்நாட்டில் தொடங்கியதை அடுத்தே, தென்கொரியா அவசர அவசரமாக இரவில் இச்சேவையை தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஒலிம்பிக் பனிச்சறுக்கில் தங்கம் வென்ற வீராங்கனையான கிம் யுனா மற்றும் எக்சோ பேண்ட் இசைக்குழுவின் உறுப்பினர்கள் ஆகியோர் உலகின் முதல் 5ஜி வாடிக்கையாளர்களாக இருப்பார்கள் என எஸ்.கே.டெலிகாம் கூறியுள்ளது.