போயிங் 737 மேக்ஸ் விமானத்தில் தலைமைச் செயலதிகாரி பயணித்து சோதனை!
போயிங் நிறுவனம் தனது 737 மேக்ஸ் ரக விமானத்தின் ஆன்டி-ஸ்டால் மென்பொருளை வெற்றிகரமாகப் பரிசோதித்தபோது அதில் தங்களது தலைமைச் செயலதிகாரியும் பயணித்ததாக அறிவித்துள்ளது.
போயிங் 737 மேக்ஸ் 8 ரகத்தை சேர்ந்த 2 விமானங்கள் விபத்துக்குள்ளானதை அடுத்து அதன் MCAS ஆன்டி-ஸ்டால் மென்பொருளில் கோளாறு இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், அந்த மென்பொருளை சரிசெய்த பின் போயிங் 737 மேக்ஸ் 8 போன்றே காக்பிட் கொண்ட அதைவிட சிறிய ரக விமானமான போயிங் 737 மேக்ஸ் 7-ஐக் கொண்டு சோதனை நடத்தப்பட்டது.
அப்போது போயிங் தலைமைச் செயலதிகாரி டெண்ணிஸ் முய்லென்பெர்க் அந்த விமானத்தில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையும், இனி மேற்கொள்ளவிருக்கும் சோதனைகளின் அறிக்கைகளும் அமெரிக்க வான்போக்குவரத்து நிர்வாகத்துக்கு அனுப்பப்படவுள்ளது.