சரக்கு கப்பலுடன் எண்ணெய் கப்பல் மோதி விபத்து: 32 பேர் காணவில்லை
சரக்கு கப்பலுடன் எண்ணெய் கப்பல் மோதி விபத்துக்கு உள்ளானதில் 32 பேரை காணவில்லை.
சீனா கிழக்கு கடற்பரப்பில் சனிக்கிழமை மாலை இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்தினால், 136,000 டன் ஈரான் நாட்டு எண்ணெயை சுமந்து வந்த பனாமாவில் பதிவு செய்யப்பட்ட சான்சி கப்பல் தீப்பிடித்தது.
காணாமல் போன 32 பேரும் எண்ணெய் கப்பலில் பணிப்புரிபவர்கள் என்று சீன போக்குவரத்து அமைச்சகம் கூறி உள்ளது. 32 பேரில் 30 பேர் இரானியர்கள், 2 பேர் வங்க தேசத்தை சேர்ந்தவர்கள்.
சரக்கு கப்பலில் இருந்த 21 பேரும் மீட்கப்பட்டு விட்டார்கள் என்றும் அந்த அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும் அந்த அமைச்சகம், "விபத்துக்குள்ளான அந்த கப்பல் இன்னும் எரிந்துக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கடற்பரப்பில் எண்ணெய் படர்ந்துள்ளது. மீட்பு பணியை துரிதப்படுத்தி உள்ளோம்." என்றுள்ளது.
சீன அரசு ஊடகம் வெளியிட்டுள்ள புகைப்படம், அந்த எண்ணெய் கப்பலிலிருந்து பெரும் புகை எழுவதை காட்டுகிறது.
மோசமான வானிலை மற்றும் எண்ணெய் கப்பலிலிருந்து எழும் புகை ஆகியவை மீட்பு பணியை கடினமாக்கி உள்ளதாக இரான் துறைமுகங்கள் மற்றுன் கடல்சார் அமைப்பின் தலைவர் முகமத் ரஸ்தாத் இரானிய தொலைக்காட்சியிடம் கூறி உள்ளார்.