எத்தியோப்பிய விமான விபத்து எதிரொலி: போயிங் விமான நிறுவனம் மீது வழக்கு!
எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் அந்நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யா நாட்டின் தலைநகர் நைரோபிக்கு கடந்த 10-ந்தேதி புறப்பட்டு சென்றது.
ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில், 6 நிமிடங்களில் அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் 157 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து உலகை உலுக்கியது. அதைத் தொடர்ந்து இந்த விமானங்கள் பறக்க உலக நாடுகள் தடை விதித்தன.
இந்த விமான விபத்து தொடர்பாக அமெரிக்காவில் சிகாகோ நகர மத்திய கோர்ட்டில் ருவாண்டா நாட்டைச் சேர்ந்த ஜேக்சன் முசோனி என்பவர், போயிங் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கில், விபத்துக்குள்ளான விமானத்தில் தானியங்கி கட்டுப்பாட்டு அமைப்பு தவறாக வடிவமைக்கப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக தாக்கலாகி உள்ள முதல் வழக்கு இதுதான். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.