கலப்பு விசாரணையை நிராகரித்து நாட்டின் சுயாதீனத்தன்மை பாதுகாப்பு! - ரணில்

ஆசிரியர் - Admin
கலப்பு விசாரணையை நிராகரித்து நாட்டின் சுயாதீனத்தன்மை பாதுகாப்பு! - ரணில்

கலப்பு நீதிமன்ற பொறிமுறையை ஜெனிவா கூட்டத்தொடரில் நிராகரித்ததன் மூலம் இலங்கையின் சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில், கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘தேசபிதா டி.எஸ். சேனாநாயக்கவின் கொள்கை வழியில் தான் நாம் பயணிக்கின்றோம் என்பது நேற்று கூட உறுதிப்படுத்தப்பட்டது. சர்வதேச நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு நீதிமன்ற பொறிமுறை அவசியம் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் ஜெனீவா தொடரில் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும், இலங்கை ஜனநாயக நாடு. சுயாதீன நீதிமன்ற கட்டமைப்பு இருக்கின்றது என சுட்டிக்காட்டி மேற்படி கோரிக்கையை வெளிவிவகார அமைச்சர் நிராகரித்தார்.

அத்துடன், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் செயலகமொன்றை இலங்கையில் அமைக்க வேண்டியதில்லை. மனித உரிமை ஆணையாளர் எந்நேரத்தில் வேண்டுமானாலும் எமது நாட்டுக்கு வரலாம் என்றும் எமது நாட்டின் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்மூலம் இலங்கையின் சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டது. அதேவேளை, படையினரை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல இடமளிக்கப்படாது. எவராவது தவறிழைத்திருக்கும் பட்சத்தில் உள்நாட்டில் வழக்கு தொடுத்து நடவடிக்கை எடுக்கலாம். எமது அரசு படையினரை தண்டிக்கவில்லை. மாறாக ஐ.நா. அமைதிப்படைக்கே ஆட்களை அனுப்பியுள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

Radio
×