முப்படைகளின் பிரதானியாக பேர்க்குற்றவாளி சவேந்திர சில்வா நியமனம், மறுபரிசீலனை செய்யகோருக்கிறார் அனந்தி..

ஆசிரியர் - Editor I

முப்படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ள சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகமும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்தார். 

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:-  

யுத்தக்குற்றவாளியாக முன்னிறுத்தியுள்ள சவேந்திர சில்வாவிற்கு உயர்பதவி வழங்கியிருப்பது தமிழ் மக்களுக்கு வேதனை அழிக்கின்றது. முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்கும் நூற்றுக்கணக்கானோல் சரணடைந்து, 

கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டமைக்கு காரணமாக இருந்த இந்த யுத்தக்குற்றவாளியை முப்படைகளின் பிரதானியாக ஜனாதிபதி நியமித்திருப்பது என்பது நாட்டில் யுத்தக் குற்றங்களுக்கான பொறுப்புக் கூறலை ஒட்டுமொத்தமாக கேள்விக்குறியாக்கியுள்ளது. 

அண்மையில் இந்த நாட்டில் ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் நீதிமன்றங்கள் ஜனநாயகத்தை நிலை நிறுத்தியுள்ளதாக தெரிவித்து யுத்தக் குற்றங்களுக்கும் உள்ளக விசாரணை போதும் என்ற நிலைப்பாட்டை அரசு ஏற்படுத்துகின்றது. 

இருப்பினும் தமிழர்கள் யுத்தக் குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையையே வேண்டி நிற்கின்றார்கள். இந்த நிலையில் சவேந்திர சில்வாவினுடைய நியமனம் தமிழ் மக்களுக்கு யுத்தக் குற்றம் உட்பட வேறு எந்த ஒரு நீதியும் இடைக்காது என்பதையே காட்டி நிற்கின்றது. 

கடந்த காலங்களில் வெளிநாடுகளிற்குச் செல்லும் போது எந்த சந்தர்ப்பத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற நிலை இருந்த போது இன்று அவரை முப்படைகளின் பிரதானியாக நியமித்திருப்பது என்பது இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காத தன்மையினையே வெளிப்படுத்தி நிற்கின்றது. 

நல்லாட்சி, நல்லிணக்கம் என்று அரசாங்கம் பேசிக்கொண்டிருந்தாலும், ஈடு செய்ய முடியாத யுத்த இழப்புக்களை சந்தித்த தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாத நிலையிலேயே இலங்கை அரசாங்கம் உள்ளது. 

யுத்தக் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறும் வரையில் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல சிங்கள பேரினவாத அரசாங்கத்தினால் ஒருபோதும் இயலாது. சவேந்திர சில்வாவினுடைய நியமனம் என்பது ஒட்டுமொத்த தமிழர்களும் நிராகரிக்கின்ற, வெறுக்கின்ற செயற்பாடாகவே இருக்கின்றது. 

எனவே சர்வதேசம் சவேந்திர சில்வாவினுடைய நியமனம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். நாட்டில் கடந்த காலத்தில் நடைபெற்ற குழப்பத்திற்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நீதியானது என்பதை பேசும் சர்வதேச இராஜதந்திரிகள் சவேந்திர சில்வாவினுடைய நியமனத்தில் உள்ள உள்ளார்ந்த அர்த்தத்தை பார்க்க வேண்டும். 

என்னுடைய கணவரான எழிலன் உட்பட ஏராளமானவர்கள் காணாமல் போகச் செய்யப்பட்ட வழக்குக் கூடா யுத்த காலத்தில் 58 ஆவது படைப்பிரிவின் தளபதியாக இருந்த இதே சவேந்திர சில்வாவிற்கு எதிராகத்தான் தொடர்ந்துள்ளோம். 

இறுதி யுத்தத்தின் போது பசியோடு உணவிற்காக வரிசையில் காத்திருந்த அந்த நூற்றுக்கணக்கான சிறுவர்கள் மீது மல்ரிபெரல் செல் தாக்குதல் நடத்தி சிறுவர்களை கொண்ட குற்றவாளியும், இறுதி யுத்தத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்கும் காரணமாக இருந்தவர் சவேந்திர சில்வாவே. 

மேலும் இறுதி யுத்தத்தில் வெள்ளை கொடியுடன் சரணடைந்த நடேசன் உட்பட ஏனைய போராளிகளின் தொடர்பிலும் இவர்தான் பொறுப்புக்கூற வேண்டியவராக உள்ளார்கள். 

சவேந்திர சில்வா தொடர்பான யுத்தக் குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் இன்று நேற்று வெளியிடப்பட்டவை இல்லை. இவை சர்வதேசத்திற்கே தெரிந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள். 

இவை அனைத்தையும் தெரிந்திருந்தும் இந்த சிறிலங்கா அரசாங்கம் சவேந்திர சில்வாவை முப்படைகளின் பிரதானியாக நியமித்திருப்பது என்பது கவலை தருகின்றது. 

தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காது, யுத்தக் குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலில் இருந்து நழுவிச் செல்லும் சிறிலங்கா அரசாங்கத்தின் தந்திரச் செயல் சவேந்திர சில்வாவினுடைய நியமனம் மட்டுமல்ல. 

மற்றுமொரு யுத்தக் குற்றவாளியாக சரத் பொன்சேகாவிற்கு பில்ட் மாஸ்டர் பதவியினை வழங்கியதும் அரசின் தந்திர செயற்பாடுகளில் ஒன்றாகும். இவை அனைத்தும் தமிழர்கள் ஒருபோதும் இராணுவத் தரப்பை யுத்தக் குற்றவாளியாக்க முடியாது என்பதை அரசாங்கம் நேரடியாக செல்லுகின்ற விடயமாகும். 

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களின் மனங்களை உண்மையில் வெல்ல வேண்டுமாக இருந்தால் யுத்தக்குற்றவாளியான சவேந்திர சில்வாவிற்கு வழங்கப்பட்ட பதவி தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு