ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மகிந்த தரப்பு சற்று பின்வாங்கிய

ஆசிரியர் - Admin
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மகிந்த தரப்பு சற்று பின்வாங்கிய

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய கட்டாயம் பொதுத் தேர்தல் நடைபெற்றால், தேர்தலில் அமோக வெற்றியை பெற முடியும் என்று உறுதியான நிலைப்பாட்டில் இருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மகிந்த தரப்பு, அந்த நிலைப்பாட்டில் இருந்து சற்று பின்வாங்கி உள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றிரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ, அடுத்த வருடத்தில் மாகாண சபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதாகவும் மக்களிடம் செல்ல வேண்டும் என்பதே தான் உட்பட அனைவரதும் எதிர்பார்ப்பு எனவும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் பொதுத் தேர்தல் தொடர்பில், அருந்திக பெர்னாண்டோ, அழுத்தமாக எதனையும் கூறவில்லை.

அதேவேளை அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அடுத்ததாக தேர்தல் ஒன்று நடைபெறும் எனவும் அது எப்படியான தேர்தல் என்பதை பின்னர் தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்.

இதனிடையே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகளின் சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது. அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரட்ன, சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என குறிப்பிட்டிருந்தார்.

எது எப்படி இருந்த போதிலும் அரசியலமைப்புச் சட்டத்தில் நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி அதிகாரம் இருப்பதாக இதற்கு முன்னர் கடுமையான சட்டவாதங்களை முன்வைத்து வந்த, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் தற்போது அந்த வாதங்களை திரும்ப பெற்றுள்ளதுடன் மாகாண சபைத் தேர்தல் அல்லது வேறு ஒரு தேர்தலுக்கு தயாராகி வருவதை அவர்களின் கருத்துக்கள் தெளிவுப்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு