கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிலிருந்து 164.2 சதுர கிலோ மீற்றர் விழுங்கப்படுகிறது..
முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவானது 164.2 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவில் இயங்குவதாக மாவட்டச் செயலகம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் 5 பிரதேச செயலகங்கள் மட்டுமே உத்தியோக பூர்வமான பிரதேச செயலகமாகவும் 6வது பிரதேச செயலகம் ஓர் மேலதிக செயலகமாகவும் இயங்கும் நிலையில் அப் பிரிவின் தரவுகள் எவையும் மாவட்டச் செயலகத்திலும் முழுமையாக கிடையாது.
இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டம் 2 ஆயிரத்து 617 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவினை உடையது. என இலங்கை நில அளவைத் திணைக்களம் கூறுகின்றது. அதனையே அத் திணைக்களத்தின் தகவல்களும் உறுதி செய்கின்றனர்.
இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் நிர்வாகம் சார் பொறுப்பாக விளங்கும் மாவட்டச் செயலகம் மாவட்டத்தின் உத்தியோக பூர்வமாக 6 பிரதேச செயலாளர் பிரிவு தொடர்பிலும் தகவல் தெரிவிக்கும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுமொத்தமான நிலப்பரப்பினையும் மிஞ்சுவதாகவே உள்ளது.
மாவட்டச் செயலகத்தின் உத்தியோக பூர்வமான தரவுகளின் பிரகாரம் 46 கிராம சேவகர் பிரிவுகளைக்கொண்ட கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவானது 728.6 ச.கிலோ மீற்றரும் ,
27 கிராம சேவகர் பிரிவினையுடைய ஒட்டுசுட்டான் 618 ச.கிலோ மீற்றரும் , 19 கிராம சேவகர் பிரிவுகளையுடைய புதுக்குடியிருப்பு 350 சதுரக் கிலோ மீற்றரும் கொண்டுள்ளதோடு 15 கிராம சேவகர் பிரிவினையுடைய மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவு 494 ச.கிலோ மீற்றரும் 20 கிராம சேவகர் பிரிவுகளையுடைய துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவானது 326.3 ச.கிலோ மீற்றர் பரப்பினை உடையது .
என மாவட்டச் செயலாளர் உத்தியோக பூர்வமாக தெரிவிக்கின்றார். இதன் அடிபபடையில் மாவட்டத்தின் குறித்த 5 பிரதேச செயலாளர் பிரிவுகளும் 127 கிராம சேவகர் பிரிவுகளுடன் 2 ஆயிரத்து 519.9 சதுரக் கிலோ மீற்றர் பரப்பில் இயங்குவது உறுதி செய்யப்படுவதோடு
மாவட்டத்தில் உத்தியோகப் பற்று அற்ற நிலையில் இயங்கும் வெலிஓயாவில் 9 ஆயிரத்து 500 மக்கள் வாழ்வதாக கணக்கிடப்படும் 9 கிராம சேவகர் பிரிவிற்காக இங்கே 117.1 சதுரக் கிலோ மீற்றர் நிலப்பரப்பை கொண்ட பிரதேச செயலாளர் பிரிவாகவே அமைய வேண்டும். ஆனால் தற்போது 164.2 சதுரக் கிலோ மீற்றர் உள்ளதாக மாவட்டச் செயலகம் தெரிவிக்கின்றது.
அவ்வாறானால் 47.1 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவு எவ்வாறு ஏற்பட்டது. ஒரு சதுரக் கிலோ மீற்றர் என்பது 610 ஏக்கர் அல்லது 247 கெக்ரேயரை குறிக்கும் நிலையில் 47.1 சதுரக் கிலோ மீற்றர் எனில் 28 ஆயிரத்து 731 ஏக்கர் நிலம் எந்தவகையில் ஏற்படுகின்றது
என்பது தொடர்பிலேயே தற்போது கேள்வி எழுப்படுகின்றது. குறித்த நிலப்பரப்பும் கரைத்துரைப்பற்று பிரதேச செயலகத்தில் இருந்து விழுங்கப்படுகின்றதா என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.