கொடிகாமத்தில் அடிப்படை வசதிகள் எதுமற்ற நிலையில் 20 குடும்பங்கள்..

ஆசிரியர் - Editor I
கொடிகாமத்தில் அடிப்படை வசதிகள் எதுமற்ற நிலையில் 20 குடும்பங்கள்..

தென்மராட்சி கொடிகாமம் மத்தியில் 327 கிராம சேவகர் பிரிவில் எந்தவிதமான அடிப்படை வசதிகள் கூட அற்ற நிலையில் சுமார் 20 குடும்பங்கள் நிர்க்கதி நிலையில் உள்ளனர். 

இக்குடும்பங்களைச் சார்ந்தவர்கள்  ஆணையிறவு உப்பளத்தில் தொழில் புரிந்து வந்த நிலையில் 1990 ம் ஆண்டு ஆணையிறவு யுத்தம் ஆரம்பித்ததன் காரணமாக இடம்பெயர்ந்து 

கொடிகாமம் புகையிரத நிலையத்தில் கைவிடப்பட்டிருந்த ரயில் பெட்டிகளில் வாழ்ந்துள்ளனர். இந்நிலையில் கொடிகாமம் மத்தியில் பற்றைக்காடுகளாக இருந்த குறிப்பிட்ட காணிகளில் 20 குடும்பங்களையும் 

அப்போது விடுதலைப் புலிகளால் குடியேற்றப்பட்டுள்ளது. குறித்த காணி திருநாவுக்கரசு மடாலய அறக்கட்டளை சபைக்கு சொந்தமானது என்றும் அந்தக்குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான முயற்சிகள் 

ஒருசிலரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அங்கு குடியிருக்கின்ற ஒரு சில குடும்பங்களுக்கு திருநாவுக்கரசு மடாலய அறக்கட்டளை சபையினால் 99 வருட குத்தகைக்கும் 

காணி வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள குடும்பங்களுக்கு தனியான மலசலகூடமோ அல்லது பொது மலசலகூடமோ இதுவரை  அமைத்துக்கொடுக்கப்படவில்லை. 

குடிநீர் வசதிகள் நிரந்தர வீடுகள் என்பன அமைக்கப்படவில்லை.  குறித்த காணிகளை குடியிருக்கின்ற மக்களுக்கே சட்டரீதியாக வழங்கப்பட வேண்டும் என சாவகச்சேரி பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றி 

அதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் சாவகச்சேரி பிரதேச சபையின் உபதவிசாளர் செ.மயூரன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் வட்டார உறுப்பினர் சிவனேசன் நகரசபை உபதவிசாளர் 

அ.பாலமயூரன் நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அப்பகுதிக்குச் சென்று மக்களின் நிலைமைகளை அவதானித்தனர். 

இதன்போது குறித்த குடும்ங்களுக்கான காணி உறுதி மாற்றலுக்கான இலவச சட்ட ஆலோசனை, குடிநீர் வசதி, தற்காலிக வீதி என்பனவற்றை உடனடியாக ஏற்பாடு செய்துகொடுத்துள்ளனர். 

மேலும் காணி உறுதிகள் அனைவருக்கும் வழங்கப்பட்ட பின்னர் வீட்டுத்திட்டம் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு