வடகிழக்கு அபிவிருத்தி செயலணி கூட்டத்தில் கடுப்பான சுமந்திரன்..

ஆசிரியர் - Editor
வடகிழக்கு அபிவிருத்தி செயலணி கூட்டத்தில் கடுப்பான சுமந்திரன்..

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க வைக்க போவதாக, சீமெந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் கூறினார். 

எனினும், அங்கே முருகைக்கல்லை அகழ்ந்து சீமெந்து தொழிற்சாலையை இயக்குவது முழு குடாநாட்டின் நீர்வளத்தையும் அழித்து, 

மனிதர்கள் வாழ முடியாத பிரதேசமாக்கி விடும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறித்த திட்டத்தினை கடுமையாக எதிர்த்தார்.

எனினும், சீமெந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் விடாப்பிடியாக நின்றார். இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்  சுமந்திரனிற்கும்   சீமேந்து கூட்டுத்தாபன தலைவருக்குமிடையில்  கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

“சீமெந்து தொழிற்சாலையை சூழவுள்ள மக்களே சீமெந்து தொழிற்சாலையை உடனடியாக இயக்க ஆரம்பியுங்கள் என வலியுறுத்துகிறார்கள்.

 ஆனால் கூட்டமைப்பு எம்.பிக்கள்தான் அதை எதிர்க்கிறார்கள்“ என திணைக்களத்தின் தலைவர் ஒரு கட்டத்தில் குறிப்பிட்டார்.

கூட்டமைப்பு எம்.பிக்கள் எவ்வளவோ வலியுறுத்தியும், கூட்டுத்தாபன தலைவர் விடாப்பிடியாக நின்றார். வடக்கு ஆளுனரும், சீமெந்து தொழிற்சாலையை அங்கு ஆரம்பித்தால் குடாநாட்டிற்கு ஆபத்து என வலியுறுத்தினார். 

கூட்டுத்தாபன தலைவர் உடனடியாக இயக்கப் போவதாக விடாப்பிடியாக நின்றபோது, “அங்கு போய் பார்த்தீர்களா? 

ஒன்றுமேயில்லை. உடனடியாக எப்படி இயக்கப் போகிறீர்கள்?“ என ஆளுனர் கேள்வியெழுப்பினார்.

ஆனாலும், கூட்டுத்தாபன தலைவர் விடாப்பிடியாக நின்றார். எம்.ஏ.சுமந்திரனுக்கும், அவருக்குமிடையில் வாதப்பிரதிவாதம் உச்சமடைய, கோபமடைந்த சுமந்திரன், 

“இவர் இப்படியே விதண்டவாதம் செய்து கொண்டிருந்தால், நாங்கள் இருக்க தேவையில்லை. ஒன்றில் அவர் இருக்க வேண்டும். அல்லது நாங்கள் இருக்க வேண்டும்“ என கடும்தொனியில் ஜனாதிபதியை நோக்கி கூறினார்.

உடனடியாக தலையிட்ட ஜனாதிபதி, கூட்டுத்தாபன தலைவரின் வாதத்தை நிறுத்தினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கருத்தை கூற முழுமையான உரித்துள்ளவர்கள் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Radio
×