மைத்திரியின் இறுதி அஸ்திரமும் புஷ்வாணமாகுமா? வாழை மரத்தை கொத்தி மாட்டிய மரங்கொத்தியின் நிலையில் மைத்திாி..

ஆசிரியர் - Editor
மைத்திரியின் இறுதி அஸ்திரமும் புஷ்வாணமாகுமா? வாழை மரத்தை கொத்தி மாட்டிய மரங்கொத்தியின் நிலையில் மைத்திாி..

ஜனாதிபதி ( நிறைவேற்று அதிகாரம்) – சபாநாயகர் ( சட்டவாக்கம்) முட்டிமோதல்
உயிருக்கு போராடுகிறது ஜனநாயகம் ! பெரும் புள்ளிகள் தாவலுக்கு தயக்கம்
14 ஆம் திகதி ‘அரசியல் சந்திரமுகி’யாக அவர் மாறலாம்

நிறைவேற்று அதிகாரம் , சட்டவாக்கம், நீதி ஆகிய முத்துறைகளும் ஒன்றின்மீது மற்றொன்று அதிகாரம் செலுத்தாத – கட்டுப்பாடுகளை விதிக்காத வகையிலேயே செயற்படவேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் மலர்ந்து, நல்லாட்சி மேலோங்கும்.

மாறாக முத்துறைகளும் முட்டிமோதிக்கொண்டால் ஜனநாயகம் படுகுழிக்குள் விழுந்து, ஏதேச்சாதிகாரம் தலைவிரித்தாட துவங்கும். அதன்பின்னர் எல்லாமே தலைகீழாக நடக்கும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் பதவியை வகித்த ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையிலான அரசியல் மோதலானது இறுதியில் ஆட்சிமாற்றம்வரை சென்றது.

’19’ கொள்கை விளக்க உரை

‘பல்டி’யடித்த பாவத்தை போக்கவும், மஹிந்தவுடன் மீண்டும் சங்கமிப்பதற்காகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்தவை பிரதமராக நியமித்தாலும் அதை ஏற்பதற்கு சபாநாயகர் மறுத்துவிட்டார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை – ரணில்தான் சட்டரீதியான பிரதமர் என்றும் அவர் இடித்துரைத்துவிட்டார்.

இதனால் ஜனாதிபதி கடும் சீற்றத்தில் இருப்பதுடன், இலக்குவைத்த பெரும் புள்ளிகள் தாவலுக்கு தயக்கம் காட்டுவதால் 14 ஆம் திகதி பலப்பரீட்சைக்கு அவர் அஞ்சுகிறார். இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே மைத்திரி தரப்பிலிருந்து அறிவிப்புகள் வெளியாகின்றன.

எட்டாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் எதிர்வரும் 14 ஆம் திகதி கூடவுள்ளது. இந்த சம்பிரதாயபூர்வ அமர்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஆரம்பித்துவைப்பார்.

அரசமைப்பினர் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் கொள்கை விளக்கவுரையை நிகழ்த்துவார். அவ்வுரை முடிவடைந்த பின்னர் நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதே மஹிந்த – மைத்திரி கூட்டணியின் திட்டமாக உள்ளது.

எனினும், அன்றைய தினம் பெரும்பான்மையை உறுதிப்படுத்துவதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்பதில் சபாநாயகர் உறுதியாக இருக்கிறார். வெளிநாட்டு தூதரகங்களுக்கும் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளார்.

தற்போதுதான் நிறைவேற்றுக்கும் ( ஜனாதிபதி), சட்வாக்கத்துக்கும் ( சபாநாயகருக்கும்) இடையிலான மோதல் ஆரம்பமாகியுள்ளது. இது நல்ல சகுணமாக தெரியவில்லை.

ஜனாதிபதியிடம் நிறைவேற்று அதிகாரம் இருந்தாலும், நாடாளுமன்றத்தில் அதிகாரம் படைத்தவராக சபாநாயகர் திகழ்கின்றார். அவரின் கையொப்பம் இருந்தால் மட்டுமே இயற்றப்பட்ட சட்டங்கள்கூட நடைமுறைக்குவரும். ஆகவே, சபாநாயகரின் கோரிக்கையை நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியால் இலகுவில் புறந்தள்ளிவிடமுடியாது.

பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற ஒன்றியம், சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் போன்ற அமைப்புகளும் இருக்கின்றன. ஜனாதிபதி தனது அதிகாரத்தை ஜனநாயகத்துக்க முரணான வகையில் பயன்படுத்தினால் மேற்படி அமைப்புகளின் உதவியை சபாநாயகர் கோரலாம்.

 இவ்வமைப்புகள் பக்கச்சார்பானவை என்று கூறமுடியாது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் சர்ச்சை எழுந்தபோது மஹிந்த அணிகூட மேற்படி அமைப்புகளிடம் முறையிட்டிருந்தன.

எனவே, சட்டவாக்க சபையுடன், ஜனாதிபதி மோதுவாரானால் அது மரங்கொத்திப் பறவை வாழமரத்தை கொத்துவதற்கு சமனானச்செயலாகும். அதன்பின்னர் இடியப்பச் சிக்கல்தான் உருவாகும். சர்வதேச அழுத்தங்களுக்கு அது தானாகவே வழிவகுத்துவிடும்.

பிரதம நீதியரசராக சிராணி பண்டாரநாயக்க பதவிவகித்தபோது, சபாநாயகருக்கு அனுப்பவேண்டிய கடிதமொன்றை, நாடாளுமன்ற செயலாளருக்கு அனுப்பிய காரணத்தை மையப்படுத்தி அவருக்கு எதிராக மஹிந்த அரசு குற்றப்பிரேரணையை கொண்டுவந்தது.

‘திவிநெகும’ சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மஹிந்த அரசுக்கு மரண அடியாக அமைந்ததாலேயே, பிரதம நீதியரசராக இருந்த சிராணி குறிவைக்கப்பட்டார். ஜனநாயகத்துக்கு புறம்பாக இரவோடிரவாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். 

அப்போது நிறைவேற்று, சட்டவாக்கம், நீதி ஆகிய முத்துறைகளுக்குமிடையே பெரும் மோதல் ஏற்பட்டிருந்தது.

மஹிந்த ஆட்சிகவிழ்வதற்கு இவ்விவகாரமே முக்கிய காரணமாக அமைந்தது என்றுகூட சொல்லலாம். இதனால்தான் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட கையோடு சிராணி ஒருநாள் பிரதம நீதியரசராக பதவி வகித்து, உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்தார். தவறு இடம்பெற்றிருந்ததாலேயே அதற்குரிய வாய்ப்பை ஜனாதிபதி மைத்திரி வழங்கியிருந்தார்.

அவ்வாறானதொரு நெருக்கடிநிலைதான் தற்போது உருவாகியுள்ளது. நிறைவேற்று அதிகாரத்துக்கும், சட்டவாக்க சபைக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. குறுகிய அரசியல் நலனுக்காக, சட்டவாக்க சபையுடன் மோதி, ஜனநாயகத்துக்கு புறம்பாக மைத்திரி எதையாவது செய்வாரானால், அது சொற்பகால இன்பமாக அவருக்கு அமைந்தாலும், எதிர்காலம் என்னவோ இருள் சூழ்ந்ததாகவே அமையும்.

 எழுத்து – ஆர்.சனத்

Radio
×