பாடசாலை சீருடையுடன் நின்ற மாணவன் மீது தாக்குதல், இ.போ.ச சாரதி கைது..
மாங்குளம்- பனிக்கன்குளம் பகுதியில் பாடசாலை சீருடையில் நின்ற மாணவனை தாக்கிய இ.போ.ச சாரதி மாங்குளம் பொலிசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சண்முகம் தவசீலன் என்னும் மாணவனை 18.10.2018 அன்று பனிக்கன்குளம் பகுதியில் சீருடையில் நின்றவேளையில் பருத்துத்துறை சாலைக்குரிய கொழும்பு சேவையில் ஈடுபடும் NP 8859 இலக்க பேரூந்தின் சாரதி தாக்கியதாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது.
இருப்பினும் நேற்றுக் காலைவரையில் குறித்த பேரூந்தின் சாரதி பொலிசாரால் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்து பொலிசார் மீது நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்த கிராம மக்கள்
சாரதியை கைது செய்யும் முகமாக நேற்று காலை பனிக்கன்குளம் சந்தியில் கிராம அபிவிருத்தி சங்கம் , இளைஞர்கழக உறுப்பினர்கள் ஏனைய அமைப்புக்களின் உறுப்பினர்கள் பொது மக்கள் என ஒன்று சேர்ந்து பருத்துத்துறை பேரூந்து அப்பகுதியை அடைந்தவேளையில் NP8859 இலக்கமுடைய பேரூந்தினை வழிமறித்து நிறுத்தினர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் பேரூந்தை மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டனர்.
இருப்பினும் குறித்த தினம் கடமையாற்றிய சாரதி மற்றும் நடாத்துனர் பேருந்தில் கடமையில் இல்லாத்தோடு உரிய சாரதி பொலிஸ் நிலையம் வருவதாக தகவல் வழங்கப்பட்டமையால் பேருந்து தொடர்ந்தும் பயணிக்க அனுமதிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பொலிஸ் நிலையம் வந்த சாரதியை மாங்குளம் பொலிசார் கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சாரதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதேநேரம் குறித்த மாணவர்கள் பேருந்தின் மீது கல் வீசித் தாக்க முற்பட்ட காரணத்தினாலேயே தாக்கியதாக சாரதி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார் .