மாற்று காணியும்,பணமும் தாங்கள். அடம்பிடிக்கும் முப்படை..

ஆசிரியர் - Editor I
மாற்று காணியும்,பணமும் தாங்கள். அடம்பிடிக்கும் முப்படை..

யாழ்.மாவட்டத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸாரிடம் உள்ள மக்களுடைய காணி விடுவிக்க வேண்டுமானால் அதற்குப் பதில் மாற்றுக் காணிகளை தரவேண்டும். அத்துடன் முகாம்களை நகர்த்துவதற்குத் தேவையாக பணத்தையும் அரசு தர வேண்டும். இல்லையேல் காணி விடுவிப்பு உடனடிச் சாத்தியம் இல்லை.

இவ்வாறு நேற்று இடம்பெற்ற காணி விடுவிப்பு தொடர்பான கூட்டத்தில் அடம்பிடித்தனர் முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள்.

இவ்வாறு யாழ்.மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் தலைமையில் படையினர் மற்றும் பொலிஸாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் நேற்று பிற்பகல் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸார் வசமுள்ள  பொது மக்களது காணிகளை விடுவிப்பது தொடர்பாக பேசப்பட்டது.

இக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், ஈ.சரவணபவன், ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜென்றல் தர்ஷன ஹெட்டியாராச்சி, கடற்படை தளபதி, விமானப்படை உயர் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்

கூட்டத்தில் இருந்த மக்கள் பிரதிநிதிகள் இராணுவம் வசம் இருந்த காணிகள் ஒரு தொகுதி விடுவிக்கப்பட்டுள்ள போதும், கடற்படையினருடைய வசம் உள்ள மக்களின் காணிகள் சொற்ப அளவே விடுவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினர்.

கடற்படை விடுவிக்கவுள்ள காணிகள், அவை எந்தக் காலப்பகுதிக்குள் விடுவிக்கப்படும்?, எத்தனை ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும்? என்ற விபரங்களை தருமாறு கூட்டத்தில் கோரப்பட்டது. 

மேலும் இராணுவத்தின் வசம் உள்ள காணிகளில் ஒரு தொகுதி ஏற்கனவே விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை உடனடியாக விடுவிப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்றும் படைத்தரப்பால் தெரிவிக்கப்பட்டது. 

குறித்த காணிகள் விடுவிக்கப்பட வேண்டுமாயின் அங்கு நிலை கொண்டுள்ள இராணுவத்தை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டும். அதற்கு மாற்றுக் காணிகள் இராணுவத்திற்கு வழங்கப்பட வேண்டும்.

அவ்வாறு காணிகள் வழங்கப்பட்டாலும் படைமுகாங்களை இடமாற்றம் செய்வதற்கு செலவிடும் நிதியைஅரசாங்கம் வழங்க வேண்டும். இவை நடைபெற்றாலே மேலதிக காணிகள் விடுவிப்புக்கான வாய்ப்புக்கள் ஏற்படும் என்று இராணுவத் தரப்பால் தெரிவிக்கப்பட்டது. 

இதேபோன்று பொலிஸாரின் வசம் உள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டுமானால் பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸார் தங்குமிடம் அமைப்பதற்கான காணிகளை ஒதுக்க வேண்டும். அங்கு பொலிஸ் நிலையங்களை அமைப்பதற்கான செலவுகளையும் அரசே வழங்க வேண்டும். 

அதற்கான செலவீனங்களும் அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டும் என பொலிஸ் அதிகாரிகளும் நிபந்தனை விதித்தனர். இதேவேளை, படையினர் வசமுள்ள தனியார் காணிகளை டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.

இதனையடுத்து ஜனாதிபதியின் பணிப்புரையைச் செயற்படுத்துவது தொடர்பாக தாம் துரிதமாக செயற்படுவதாக இராணுவ கட்டளைத் தளபதி தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு