SuperTopAds

விபத்துக்குள்ளான MT Seagull 9 கப்பலை வெற்றிகரமாக மீட்ட இந்திய கடலோரக் காவல் படை!

ஆசிரியர் - Editor IV
விபத்துக்குள்ளான MT Seagull 9 கப்பலை வெற்றிகரமாக மீட்ட இந்திய கடலோரக் காவல் படை!

பாரதீப் கடற்பரப்பிற்கு அருகே விபத்தில் சிக்கிய 'MT Seagull 9' என்ற இரசாயனப் போக்குவரத்து கப்பலை இந்திய கடலோரக் காவல் படை (ICG) வெற்றிகரமாக மீட்டுள்ளது.

9,000 மெட்ரிக் டொன் பாம் எண்ணெய் மற்றும் 23 மாலுமிகளுடன் பயணித்த இந்தக் கப்பல் சமநிலையிழந்ததை அடுத்து, கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பிற்கு அமைய 'ICG Vishwast' கப்பல் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியது.

மோசமான வானிலைக்கு மத்தியிலும், கடலோர காவல்படையின் நிபுணர் குழுவினர் கப்பலில் ஏறி மூழ்கி இயங்கும் பம்புகளைப் பயன்படுத்தி நீரினை வெளியேற்றியதுடன், சேதமடைந்த குழாய்களையும் சீரமைத்து கப்பலின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தினர்.

மேலும், கடல் மாசுபாடு ஏற்படுவதைத் தடுக்கவும் தொடர் கண்காணிப்பிற்காகவும் மாசுபாட்டுக் கட்டுப்பாட்டுக் கப்பல் மற்றும் கடலோரக் காவல்படைக் கப்பல் என்பனவும் அந்தப் பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கடலோரக் காவல்படையின் 'டோர்னியர்'  வானூர்தி மூலம் மேற்கொள்ளப்பட்ட வான்வழி ஆய்வில், கடலில் கலந்த குறைந்த அளவிலான பாம் எண்ணெய் தற்போது முழுமையாகக் கலைக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது விபத்துக்குள்ளான கப்பல் பாதுகாப்பாக பாரதீப் துறைமுகத்தை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

அத்துடன், கடல்சார் பாதுகாப்பிற்காக இந்திய கடலோர காவல்படை 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Radio