போதைப்பொருள் கடத்தல் - இந்தியப் பிரஜைக்கு சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட இந்தியப் பிரஜையான அபூதி ஃபலீல் என்பவருக்கு சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சவுதி உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, குறித்த நபர் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருளை சவுதி அரேபியாவிற்குள் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் பின்னர் வழக்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தீர்ப்பளித்து ‘கத்ல் தஅ்ஸீரன்’ எனப்படும் மரண தண்டனையை விதித்தது.
குறித்த தீர்ப்பு மேல்முறையீட்டு நடைமுறைகளுக்குப் பின்னர் இறுதியானதைத் தொடர்ந்து, அரச உத்தரவின் அடிப்படையில் 27 செப்டம்பர் 2026 அன்று கிழக்கு மாகாணத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.




