சாமிக கருணாரத்னவின் மரபணு பரிசோதனை - கோரிக்கையை நிராகரித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம்!

இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக கருணாரத்னவின் மரபணு பரிசோதனைக்காக இரத்த மாதிரியைப் பெறுவதற்கான நீதிமன்ற உத்தரவைப் பிறப்பிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த உத்தரவுக்கு எதிராக, குறித்த வழக்கைத் தாக்கல் செய்த விமானி ஒருவர் கொழும்பு குடிசார் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார்.
சாமிக கருணாரத்னவுடன் தனக்குப் பிறந்த குழந்தை எனக் கூறியுள்ள அவர், குழந்தையின் தந்தையாக சாமிக கருணாரத்னவைக் குறிப்பிடும் வகையில் பிறப்புச் சான்றிதழை வழங்குமாறு பதிவாளர் நாயகத்திற்கு உத்தரவிடக் கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
குழந்தையின் தந்தைத்துவத்தை உறுதிப்படுத்த மரபணு பரிசோதனை மேற்கொள்வதற்காக சாமிக கருணாரத்னவின் இரத்த மாதிரியைப் பெற நீதிமன்ற உத்தரவைப் பிறப்பிக்குமாறும் மனுதாரர் தரப்பு கோரியிருந்தது.
எனினும், மனுதாரர் கோரிய நிவாரணத்தை வழங்குவதற்கான போதிய காரணங்கள் முன்வைக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டு, கடந்த ஓகஸ்ட் 4ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் குறித்த கோரிக்கையை நிராகரித்திருந்தது.
இந்நிலையில், அந்த உத்தரவுக்கு எதிராக தற்போது மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் ஒக்டோபர் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.




