SuperTopAds

2029 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக விஜய்!

ஆசிரியர் - Editor IV
2029 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக விஜய்!

2029ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சிகளும், கட்சியின் பெயரை ‘தேசிய வெற்றிக் கழகம்’ என மாற்றும் திட்டமும் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் விஜய் தலைமையிலான அரசு செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், தேசிய அளவில் ராகுல் காந்திக்கு மாற்றாக விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதை டெல்லி காங்கிரஸ் தலைமை கடுமையாக எதிர்ப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், தேசிய அரசியலில் ராகுல் காந்தியின் தலைமைக்கு எதிராக விஜய் களம் இறங்கினால், தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு காங்கிரஸ் கட்சி வழங்கி வரும் ஆதரவை முழுமையாகத் திரும்பப் பெறுவது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஒருவேளை காங்கிரஸ் தனது ஆதரவைத் திரும்பப் பெற்றால், சட்டப்பேரவையில் விஜய் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இதன் காரணமாக, மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைப்பதா அல்லது தேசிய அளவில் பிரதமர் பதவியை நோக்கிய இலக்கை அடைவதா என்ற இக்கட்டான அரசியல் சூழ்நிலைக்கு விஜய் தள்ளப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Radio