நிவாரணப் பொருட்களுடன் இரண்டாவது வானூர்தியையும் நேபாளத்திற்கு அனுப்பிய இந்தியா!

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ள நிலையில், 37.5 தொன் மனிதாபிமான நிவாரணப் பொருட்கள், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களுடன் இரண்டாவது வானூர்தியை இந்தியா நேபாளத்திற்கு அனுப்பியுள்ளது.
இதுகுறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதுடன், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நேபாளத்திற்கு இந்தியா தொடர்ந்து முழுமையான ஆதரவை வழங்கும் என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, கடந்த புதன்கிழமை 10 தொன் நிவாரணப் பொருட்களுடன் முதலாவது வானூர்தி நேபாளத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது.
காத்மாண்டுவில் இந்தியத் தூதுவர் நவீன் ஸ்ரீவாஸ்தவா தலைமையிலான குழுவினர், நிவாரணப் பொருட்களை நேபாளத்தின் கலாசாரம், சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கடக் ராஜ் போடேலிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளனர்.
வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்குவதே இந்த நிவாரணப் பொருட்களின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்க இந்தியா உறுதிபூண்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.




