SuperTopAds

வவுனியா மாநகர முதல்வர் விவகாரம்: ஆளுநரின் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிப்பு!

ஆசிரியர் - Editor II
வவுனியா மாநகர முதல்வர் விவகாரம்: ஆளுநரின் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிப்பு!

வவுனியா மாநகர சபையின் முதல்வரைப் பதவி நீக்கம் செய்து வட மாகாண ஆளுநர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு வழங்கப்பட்டிருந்த இடைக்காலத் தடைக்கட்டளையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை நீடித்து வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆளுநரின் பதவி நீக்க உத்தரவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை விண்ணப்பம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, மனுதாரர் தரப்பில் பெறப்பட்ட இடைக்காலத் தடையை நீக்குமாறு எதிர்மனுதாரர்கள் தரப்பில் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டிருந்தது. இதற்குப் பதிலளிக்கும் வகையில் மனுதாரர் தரப்பினால் நேற்றைய தினம் மறுஆட்சேபனைத் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

நேற்றைய நாள் முழுவதும் இடைக்காலத் தடையை நீடிப்பதா அல்லது ரத்து செய்வதா என்பது தொடர்பிலேயே விரிவான விவாதங்கள் இடம்பெற்றன.

இது குறித்து மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்:

"நீதிமன்றின் பணிப்புரைக்கு அமைவாக, இரு தரப்பு விவாதங்களையும் எழுத்துமூல சமர்ப்பணங்களாக வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதிக்குள்ளோ அல்லது அதற்கு முன்னரோ நீதிமன்ற அலுவலகத்தில் தாக்கல் செய்யவுள்ளோம்."

"தாக்கல் செய்யப்படும் சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னர், இடைக்காலத் தடை தொடர்பான இறுதி உத்தரவை நீதிமன்றம் செப்டம்பர் 9 ஆம் திகதி அறிவிக்கும்."

"அதன் பின்னரே பிரதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அதுவரை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடைக்கட்டளை அமலில் இருக்கும்" எனத் தெரிவித்தார்.

Radio