SuperTopAds

மாவட்ட ரீதியிலான ஒருங்கிணைந்த சுற்றுலா அபிவிருத்தித் திட்டங்களை துரிதமாக செயற்படுத்துவது குறித்து ஆராய்வு

ஆசிரியர் - Editor II
மாவட்ட ரீதியிலான ஒருங்கிணைந்த சுற்றுலா அபிவிருத்தித் திட்டங்களை துரிதமாக செயற்படுத்துவது குறித்து ஆராய்வு

வடக்கு மாகாணத்தின் ஒருங்கிணைந்த சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் ருவன் குணசேகரவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதன் போது, வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையில் முதலீடு செய்வதற்குப் பல முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முன்வருகின்றபோதிலும், வனவளத் திணைக்களம், வனவிலங்குகள் திணைக்களம் மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்டவர்களிடமிருந்து அனுமதிகளைப் பெறுவதில் நிலவும் தாமதங்கள் குறித்து ஆளுநர் எடுத்துரைத்தார்.

ஆளுநர் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் அவதானிப்புகள் குறித்துக் கவனம் செலுத்திய சுற்றுலாத்துறை பிரதியமைச்சர், மாகாணத்தில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பது தொடர்பிலும், மாவட்ட ரீதியிலான ஒருங்கிணைந்த சுற்றுலா அபிவிருத்தித் திட்டங்களை எவ்வாறு துரிதமாகச் செயற்படுத்துவது என்பது குறித்தும் ஆளுநருடன் விரிவாக ஆராய்ந்தார்.

இந்தக் கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜெ.றஜீவன், ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் தலைவர், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.