வெப்பநிலை அதிகரித்து - தூக்கத்தை இழக்கும் நிலையில் மக்கள் - ‘கிளைமேட் சென்ட்ரல்’ ஆய்வில் தகவல்!

புவி வெப்பமடைதல் காரணமாக இந்தியாவில் இரவு நேர வெப்பநிலை அதிகரித்து வருவதால், மக்கள் தங்களின் தூக்கத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ‘கிளைமேட் சென்ட்ரல்’ அமைப்பின் புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.
காலநிலை மாற்றத்தால் இந்தியர்கள் ஆண்டுக்குச் சராசரியாக 90 மணி நேரத்திற்கும் மேலாகத் தூக்கத்தை இழக்கின்றனர்.
தூக்க இழப்பில் புதுச்சேரி மாநிலம் 92 மணி நேரத்துடன் முதலிடத்தில் உள்ளது.
அதனைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசம் (88.6 மணி நேரம்) மற்றும் கேரளம் (88.3 மணி நேரம்) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
பெருநகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. அங்கு ஆண்டுக்கு 93 மணி நேரத் தூக்கம் இழக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை (84 மணி நேரம்) மற்றும் கொல்கத்தா (80 மணி நேரம்) ஆகிய நகரங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
காலநிலை மாற்றத்தினால் மட்டும் தமிழ்நாட்டில் ஒரு நபர் சராசரியாக 7.9 மணி நேரத் தூக்கத்தை இழப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தூக்கமின்மையானது மனிதர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியையும் மனநலத்தையும் பெருமளவு பாதிக்கும் என்றும், இது நீண்டகால ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.




