பந்தைக் கொடுக்காததால் சர்ச்சை - நோர்வே வீரர் சோர்லோத்துக்குக் குவியும் அவதூறுகள்!

உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரின் காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்து நோர்வே அணி வெளியேறியதைத் தொடர்ந்து.
இன்னிலையில் அந்த அணியின் முன்கள வீரர் அலெக்சாண்டர் சோர்லோத் சமூக வலைத்தளங்களில் கடுமையான தாக்குதல்களுக்கும் அவதூறுகளுக்கும் உள்ளாகி வருவதாக அணியின் பயிற்சியாளர் ஸ்டேல் சொல்பாக்கன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான இப்போட்டியில் நோர்வே அணி 1-0 என முன்னிலையில் இருந்த போது ஒரு மிக முக்கியமான கவுண்டர்-அட்டாக் (Counter-attack) வாய்ப்பு கிடைத்தது.
அப்போது இங்கிலாந்தின் ஒரேயொரு தற்காப்பு வீரருக்கு எதிராக சோர்லோத் மற்றும் எர்லிங் ஹாலண்ட் ஆகிய இருவர் மட்டுமே முன்னேறிச் சென்றனர்.
அந்தப் பரபரப்பான சூழலில், மார்க்கிங் ஏதுமின்றி தனித்து நின்ற நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட்டுக்குப்
பந்தைக் கடத்தாமல் சோர்லோத் தானே கோல் அடிக்க முயற்சித்தார்.
அவர் உதைத்த பந்தை இங்கிலாந்து தற்காப்பு வீரர் தடுத்தார்.
இந்தத் தவறு நடந்த சில நிமிடங்களிலேயே இங்கிலாந்து அணி கோல் அடித்து ஆட்டத்தைச் சமநிலைக்குக் கொண்டு வந்ததுடன், கூடுதல் நேரத்தில் 2-1 என்ற கணக்கில் வெற்றியும் பெற்றது.
இந்தத் தோல்விக்கு சோர்லோத் தான் காரணம் எனக் கூறி காற்பந்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விபரீதமான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
சோர்லோத்தின் துணைவியார் லேனா செல்னஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்கிரீன்ஷாட்டுகளின்படி, சோர்லோத்தை தற்கொலை செய்துகொள்ளுமாறு தூண்டும் வகையிலான மிக மோசமான அச்சுறுத்தல்களும், வெறுப்புணர்வை உமிழும் செய்திகளும் அனுப்பப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.
இது குறித்து மியாமியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய நோர்வே பயிற்சியாளர் சொல்பாக்கன், "இது மிகவும் கொடூரமானது, துரதிர்ஷ்டவசமானது.
நாம் இப்படிப்பட்ட ஒரு உலகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுபோன்ற முக்கிய போட்டி நாட்களின் போது சமூக வலைத்தளங்களில் இருந்து விலகியிருக்குமாறு நான் என் வீரர்களுக்கு எப்போதும் கூறுவேன்.
எந்த மட்டத்திலும் நியாயப்படுத்த முடியாத, அறிவற்ற ஒரு செயலாகவே இந்த இணைய விசிறிகளின் போக்கைப் பார்க்கிறேன்" என்று சாடினார்.
விளக்கமளித்த சோர்லோத்
அத்லெடிகோ மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடும் 30 வயதான சோர்லோத், போட்டிக்குப் பின்னர் தனது முடிவை நியாயப்படுத்திப் பேசியிருந்தார்.
"அந்தச் சூழ்நிலையில் எர்லிங் ஹாலண்ட்டுக்குப் பந்தைக் கொடுப்பது மட்டும்தான் எனது ஒரே நோக்கமாக இருந்தது.
ஆனால் இங்கிலாந்து வீரர் ஜான் ஸ்டோன்ஸ் நான் பந்தைக் கடத்தும் வழியை மிகச் சரியாக மறித்து நின்றார்.
அந்தப் பாஸ் (Pass) சாத்தியமில்லை என்று தோன்றியதால்தான் நான் நேரடியாகக் கோல் அடிக்க முயற்சித்தேன்" என்று சோர்லோத் விளக்கமளித்துள்ளார்.
விளையாட்டுப் போட்டிகளில் இத்தகைய தவறுகள் சகஜம் என்ற போதிலும், ரசிகர்கள் ஒரு வீரரின் தனிப்பட்ட வாழ்க்கையை இலக்கு வைத்து இவ்வாறான சைபர் தாக்குதல்களில் ஈடுபடுவது காற்பந்து உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




