SuperTopAds

நகைகளுக்காக பெண்ணை கிணற்றில் தள்ளிவிட்ட கொடூரம்!

ஆசிரியர் - Editor IV
நகைகளுக்காக பெண்ணை கிணற்றில் தள்ளிவிட்ட கொடூரம்!

இந்தியா - தெலங்கானா மாநிலம், கரீம்நகரில் மனிதாபிமானமற்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

கூலி வேலை தருவதாகக் கூறி, 55 வயது மதிக்கத்தக்க கங்காதர லட்சுமி என்ற பெண்ணை, 21 வயது இளைஞர் ஒருவர் ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளார்.

ஆள் நடமாட்டமில்லாத வயல்வெளிக்கு அழைத்துச் சென்று, அவரிடமிருந்த செல்போன் மற்றும் தங்க நகைகளைப் பறித்துக் கொண்டதோடு, அவரை வாயைக் கட்டி ஒரு விவசாயக் கிணற்றுக்குள் தள்ளிவிட்டுள்ளார்.

கிணற்றில் விழுந்த லட்சுமி, ஒரு கயிற்றின் உதவியுடன் மேலே வர முயன்றபோது, அந்த இளைஞர் மேலிருந்து அந்தக் கயிற்றையும் அவிழ்த்துவிட்டுள்ளார்.

இருப்பினும், நீச்சல் தெரிந்ததால், தண்ணீரில் மூழ்கிவிடாமல் சுமார் 24 மணி நேரம் அவர் கிணற்றுக்குள்ளேயே தத்தளித்துள்ளார்.

இரவு முழுவதும் தண்ணீரில் இருந்தபோது கிணற்றில் இருந்த தவளைகள் அவர் கால்களைக் கடித்த நிலையிலும், தன் குடும்பத்தினரை நினைத்து மன உறுதியுடன் போராடியுள்ளார்.

இந்தக் கொடூரச் செயலைச் செய்த பட்டதாரி இளைஞனை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பந்தயங்களுக்கு அடிமையாகி, சுமார் 4 லட்சம் ரூபாய் கடனில் இருந்ததால், எளிதாகப் பணம் சம்பாதிக்க இந்தத் திட்டத்தைத் தீட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மறுநாள் அந்த வழியாக வந்த விவசாயிகள், கிணற்றுக்குள் பெண் இருப்பதை பார்த்து ஊர் மக்கள் உதவியுடன் ஒரு கட்டிலை கயிற்றில் கட்டி கிணற்றுக்குள் இறக்கி, அவரைப் பத்திரமாக மீட்டனர்.

தொழிலாளர்கள், அறிமுகமில்லாத நபர்களை நம்பி தனியாக வேலைக்குச் செல்ல வேண்டாம் என்றும், செல்லும் இடத்தின் விவரங்களை குடும்பத்தினரிடம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்றும் பொலிஸ் அறிவுறுத்தியுள்ளது.