SuperTopAds

இயக்குநர் பாக்யராஜ் மறைவு - முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு

ஆசிரியர் - Editor II
இயக்குநர் பாக்யராஜ் மறைவு - முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு

இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், பாக்யராஜின் பங்களிப்பை போற்றும் வகையில், இறுதி யாத்திரையின் போது, அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். 

அது தொடர்பில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். 

தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும். 

அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

பாக்யராஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். 

திரைத்துறையில் பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.