பசிபிக் பெருங்கடலில் அமெரிக்காவின் அணுக்கழிவு கான்கிரீட் அமைப்பில் விரிசல் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

பசிபிக் பெருங்கடலில் அமெரிக்காவின் 1,20,000 டன்களுக்கும் அதிகமான அணுக்கழிவுகளை அடைத்து வைத்துள்ள கான்கிரீட் குவிமாடம் தற்போது விரிசல் அடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மார்ஷல் தீவுகளில் உள்ள ருனிட் (Runit) தீவில் அமைந்துள்ள "ருனிட் டோம்" (Runit Dome) அல்லது "தி டூம்" (The Tomb) எனப்படும் இந்த கான்கிரீட் அமைப்பு, 1958-ஆம் ஆண்டு அமெரிக்கா நடத்திய அணுகுண்டு சோதனையால் உருவான மிகப்பெரிய பள்ளத்தை மூடுவதற்காக 1970-களின் இறுதியில் கட்டப்பட்டது.
இதன் உள்ளே 1,20,000 டன்களுக்கும் அதிகமான கதிரியக்கக் கழிவுகள் புதைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் புளூட்டோனியம்-239 (Plutonium-239) போன்ற மிகவும் ஆபத்தான கதிரியக்கப் பொருட்களும் உள்ளன.
இந்தப் பொருள் 24,000 ஆண்டுகளுக்கும் மேலாக ஆபத்தானதாகவே இருக்கும்.
ஆனால், இந்தக் கழிவுகளை முழுமையாக தனிமைப்படுத்தும் பாதுகாப்பு அடுக்கு அமைக்கப்படவில்லை. மேலும், பவளப் பாறை அடித்தளத்தின் மீது இருப்பதால், கடல்நீரும் நிலத்தடி நீரும் ஏற்கனவே இந்த அமைப்பின் வழியாகச் செல்கின்றன.
தற்போது கதிரியக்க கசிவு குறைவாக இருந்தாலும், கடல் மட்ட உயர்வு மற்றும் அதிகரித்து வரும் புயல் அலைகள் இந்தக் கான்கிரீட் குவிமாடத்தை மேலும் சேதப்படுத்தி, எதிர்காலத்தில் பெரிய சுற்றுச்சூழல் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இந்தத் தீவு கடல் மட்டத்திலிருந்து வெறும் 6.5 அடி உயரத்தில் மட்டுமே உள்ளது. 2100-ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் 3.3 அடி வரை உயரக்கூடும் என்ற கணிப்புகள் வெளியாகியுள்ளன.
அப்படி நடந்தால், தீவின் பெரும்பகுதி நீரில் மூழ்கி, ஏற்கனவே விரிசல் ஏற்பட்டுள்ள குவிமாடத்தின் மீது மிகப்பெரிய அழுத்தம் ஏற்படும்.
ஆய்வாளர்கள், இந்தக் குவிமாடத்திற்கு வெளியேயுள்ள மண் மாதிரிகளிலும் அதிக அளவிலான கதிரியக்க ஐசோடோப்புகளை கண்டறிந்துள்ளனர். இதற்கு இதுவரை நிரந்தர தீர்வு எதுவும் இல்லை.
இது, பல தசாப்தங்களுக்கு முன் நடைபெற்ற அணு ஆயுத சோதனைகளின் தாக்கம் இன்றும் சுற்றுச்சூழலுக்கும் மனிதகுலத்திற்கும் நீடித்த ஆபத்தை ஏற்படுத்தி வருவதை நினைவூட்டும் ஒரு முக்கிய எச்சரிக்கையாகும்.




