SuperTopAds

அருச்சுனா மஹிந்தவின் ஆள் தான் - இளங்குமரன் தெரிவிப்பு

ஆசிரியர் - Editor II
அருச்சுனா மஹிந்தவின் ஆள் தான் - இளங்குமரன் தெரிவிப்பு

மக்களின் வாக்குகளால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என தெரிந்து , தேசிய மக்கள் சக்தியிடம் ஆட்சியை தா என மஹிந்த தரப்பு கேட்டு நிற்கிறது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். 

கோப்பாய் பொலிஸ் நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் களுத்துறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே நடைபெற்ற பாராட்டு விழாவில் மஹிந்த ராஜபக்சே தெரிவித்த கருத்து தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

  நாட்டை தங்களிடம் தருமாறு மஹிந்த தரப்பு கோரியுள்ளது. இந்த அரசாங்கம் , நாட்டு மக்கள் வாக்களித்து ஜனநாயக ரீதியாக அமைந்த அரசாங்கம். அவர்கள் இனி தேர்தலில் வெல்ல முடியாது. என தெரிந்து கொண்டு , எம்மிடம் ஆட்சியை கேட்கின்றார்கள்

எங்களுடைய அரசாங்கம் ஊழல் வாதிகளை தண்டிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் , புதிய அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது 

மக்களின் பணத்தை சூறையாடியவர்கள் , ஆட்சிக்காக பல கொலைகளை செய்தவர்கள் , இன்று மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு வருகின்றனர். அதனால் அவர்கள் மீண்டும் மக்கள் வாக்குகளால் ஆட்சிக்கு வர முடியாது அதனால் எம்மிடம் ஆட்சி அதிகாரங்களை தாருங்கள் என கேட்டு நிற்கின்றனர். 

அவர்கள் கேட்பதற்காக மக்களால் தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி ஆட்சி அதிகாரங்களை அவர்களிடம் கையளிக்க மாட்டாது மக்கள் இந்த ஆட்சியை விரும்புகின்றனர். எதிர்வரும் காலங்களிலும் தேசிய மக்கள் சக்தியே மக்களால் தெரிவு  செய்யப்பட்ட கட்சியாக தொடர்ந்தும் ஆட்சியில் இருக்கும் என தெரிவித்தார்.