சிறுவர்களிடையே பரவி வரும் நோய்கள்

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை (Lady Ridgeway Hospital) விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா, தற்போது சிறுவர்களிடையே பல்வேறு நோய்கள் பரவி வருவதாகவும், பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.
டெங்கு, இன்ஃப்ளூயன்சா, கை-கால்-வாய் நோய் மற்றும் மெனிஞ்சைடிஸ் ஆகியவை தற்போது குழந்தைகளிடையே அதிகமாகக் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு ஒரு உயிராபத்தான நோயாகும் எனவும், காய்ச்சல், தலைவலி, கண்களின் பின்னால் வலி, உடல் மற்றும் மூட்டு வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் காணப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இன்ஃப்ளூயன்சா நோயால் காய்ச்சலுடன் இருமல், தடிமன், உடல் வலி மற்றும் மூட்டு வலி போன்றவை ஏற்படக்கூடும். இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.நோய் பரவலைக் கட்டுப்படுத்த பள்ளி மற்றும் முன்பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Coxsackievirus எனப்படும் வைரஸால் ஏற்படும் கை, கால், வாய் நோய் தற்போது பரவி வருவதாகவும், கைகள், கால்கள் மற்றும் வாய் பகுதிகளில் சிவப்பு புள்ளிகள் மற்றும் கொப்புளங்கள் தோன்றுவது முக்கிய அறிகுறிகள் எனவும் அவர் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட குழந்தைகளை 3–4 நாட்கள் வீட்டில் ஓய்வில் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
வைரஸ் காரணமாக ஏற்படும் மெனிஞ்சைடிஸ் நோயும் தற்போது பதிவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், கடுமையான தலைவலி, வாந்தி, வெளிச்சத்தைப் பார்ப்பதில் சிரமம், சத்தத்துக்கு விருப்பமின்மை போன்றவை முக்கிய அறிகுறிகளாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நோய்கள் சுவாச மற்றும் செரிமான பாதைகள் மூலம் பரவக்கூடியவை என்பதால், சுத்தமான உணவு பழக்கம், கொதித்த நீர் பருகுதல் மற்றும் அறிகுறிகள் உள்ளவர்கள் முகக்கவசம் அணிதல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் எனவும் வைத்திய நிபுணர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
பெற்றோர் குழந்தைகளின் உடல்நிலை மாற்றங்களை கவனித்து உடனடி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்




