SuperTopAds

வவுனியாவில் ஆலயத்தில் முரண்பாடு - மகன் படுகொலை ; தாய் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்

ஆசிரியர் - Editor II
வவுனியாவில் ஆலயத்தில் முரண்பாடு - மகன் படுகொலை ; தாய் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்

வவுனியா ஓமந்தையில் பகுதியில் உள்ள ஆலயத்தில் வலுக்கட்டாயமாக பூசை செய்ய முயன்ற கும்பலை தட்டிக்கேட்ட பெண் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் , அவரது மகனை கத்தியால் குத்தி கொன்றுள்ளனர். 

சம்பவத்தில் நாவற்குளம் பகுதியை சேர்ந்த சேதுபதி நிரோஜன் (வயது 28) என்பவர் உயிரிழந்துள்ள நிலையில், அவருடைய தாய் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 

குறித்த பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் கதவை உடைத்து, ஆறு பேர் கொண்ட குழுவொன்று வலுக்கட்டாயமாக பூசை செய்வதற்கு முற்பட்டுள்ளது.

குறித்த சட்டவிரோதமான செயலை அந்த இடத்திலிருந்த கொலையுண்டவரின் தாய் தட்டிக்கேட்டுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த அக்குழுவினர் தாய் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக மகன் அவர்களிடம் கேட்கச் சென்றுள்ளார். இதன் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் அக்குழுவினர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்தியுள்ளனர்.

இதனால் பலத்த காயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஓமந்தைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளையும், ஏனைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் ஓமந்தைப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது