யாழை வந்தடைந்த சிவகங்கை

யாழ்ப்பாணம் - நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் புதன்கிழமை காலை நாகபட்டினத்தில் இருந்து பயணித்தை ஆரம்பித்த, சிவகங்கை கப்பலானது மதியம் காங்கேசன்துறையை வந்தடைந்தது.
பின்னர் மீண்டும் மாலை காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி அத்தனை பயணத்தை ஆரம்பித்தது.
இதன்போது இந்தியாவில் இருந்து 93 பயணிகள் இலங்கைக்கு வந்ததுடன், 79 பயணிகள் இலங்கையில் இருந்து இந்தியாவை நோக்கி பயணித்தனர்.
குறித்த கப்பலானது சில வாரங்களுக்கு முன்னர் காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினம் நோக்கி பயணித்த நிலையில் அசாதாரண காலநிலை காரணமாக சேதமடைந்தது. இதனால் ஒரு சில வாரங்கள் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடவில்லை.
அதனைத் தொடர்ந்து சிவகங்கை கப்பலானது மீண்டும் இன்றுமுதல் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட ஆரம்பித்தது.
இந்நிலையில் இந்திய உயர்ஸ்தானகர் சந்தோஷ் ஜா காங்கேசன் துறைமுகத்துக்கு இன்றைய தினம் விஜயம் செய்து, சிவகங்கை கப்பல் அதிகாரிகளுடனும், மாலுமிகளுடனும் கலந்துரையாடினார்.
அத்துடன் கப்பல் போக்குவரத்து குறித்து பயணிகளிடமும் கருத்துக்களை கேட்டறிந்தார். மேலும் கப்பலையும் பார்வையிட்டார்.
இதன்போது, யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவர் சாய் முரளி, கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன், கப்பல் நிறுவனத்தின் அதிகாரியான பகீரதன், கப்பல் நிறுவனத்தின் இந்தியாவுக்கான சந்தைப்படுத்தல் முகாமையாளர், கப்பல் நிறுவனத்தின் ஏனைய அதிகாரிகள், சுங்தத் துறை அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.








