கிளிநொச்சி சொல்லிசை கலைஞன் விளக்கமறியலில்

எழுச்சி பாடல் பாடி , அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் கைதான இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
சாவகச்சேரி பகுதியில் உள்ள ஆலயத்தில் இடம்பெற்ற இசை நிகழ்வில், பாடலை பாடி, அந்த பாடலுக்கு தனது இசை சேர்க்கையில் உருவான சொல்லிசை பாடலை இணைத்து சமூக ஊடகங்களில் கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை கலைஞன் பகிர்ந்திருந்தார்.
அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இளைஞனை கைது செய்து விசாரணைகளின் பின், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.
நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, இளைஞன் சார்பில் முன்னிலையான சட்டதரணி நீண்ட சமர்ப்பணங்களை மன்றில் முன்வைத்த போதிலும், பிணை வழங்க பொலிஸார் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இளைஞனை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது




