டெஸ்ட் போட்டிகளில் பிங்க் நிற பந்து - ஐசிசி ஆலோசனை!

டெஸ்ட் கிரிக்கெட்டில் போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் பாதிக்கப்படுவதைத் தடுக்க, அவசர காலங்களில் சிவப்பு நிற பந்திற்குப் பதிலாக இளஞ்சிவப்பு (பிங்க்) நிற பந்தைப் பயன்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆலோசித்து வருகிறது.
ஐசிசி தலைமைச் செயல் அதிகாரிகள் குழுவின் காணொளிக் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது.
இரு அணிகளும் சம்மதித்தால், மோசமான வானிலையின் போது பிங்க் பந்தைக் கொண்டு மின்விளக்குகளின் கீழ் ஆட்டத்தைத் தொடர இந்த விதி திருத்தம் வழிவகுக்கும்.
அத்துடன் ஒருநாள் போட்டிகளின் இடைவேளையின் போது, மாற்று வீரர்களுடன் சேர்ந்து தலைமைப் பயிற்சியாளரும் மைதானத்திற்குள் சென்று ஆலோசனை வழங்க அனுமதி அளிக்கப்பட உள்ளது.
அதேநேரம் டி20 போட்டிகளின் இன்னிங்ஸ் இடைவேளை நேரத்தை 20 நிமிடங்களில் இருந்து 15 நிமிடங்களாகக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது
சட்டவிரோத பந்துவீச்சு முறைகளைக் கண்காணிக்க, கள நடுவர்களுக்கு நேரடியாக 'ஹாக்ஐ' (HawkEye) தரவுகளை அணுகும் வசதி வழங்கப்பட உள்ளது.
அகமதாபாத்தில் மே 30 அன்று நடைபெறும் ஐசிசி வாரியக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் கிடைத்தால், இந்த புதிய விதிகள் அனைத்தும் வரும் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது




