"விஜய் பதில் சொல்லியே ஆகணும்" - போராட்டத்தில் குதித்த தவெகவினர்!

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30 ஆம் தேதி தொடங்கும் வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. பிரதான கட்சிகளான திமுக, அதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் ஒரே மேடையில் 234 தொகுதி வேட்பாளர்களையும் அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் கொள்கை தலைவர்கள் புகைப்படங்களுக்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் 234 தொகுதிகளுக்கும் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் வேட்பாளர்களை அறிவித்திருந்தார். இந்நிலையில் கே.வி.குப்பம் தொகுதியை தங்களுக்கு ஒதுக்காமல் புதிதாக கட்சியில் வந்தவருக்கு சீட்டுக் கொடுத்துள்ளார்கள் என தவெகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட தவெகவினர் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''நாங்கள் தொகுதியில் என்னென்ன வேலைகள் செய்தோமோ அதற்கான எல்லா ஆதாரமும் எங்களிடம் இருக்கிறது. எங்களை நேர்காணல் செய்யவில்லை. நேற்று இரவு வரை போராடி பார்த்தோம். எங்களுக்கு சீட்டு கிடைக்கும் என்று நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் இன்னைக்கு காலையில் எங்களுக்கு அழைப்பு வரவில்லை.
எங்களுக்கு சீட்டு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கே.வி.குப்பம் தொகுதியை தங்களுக்கு ஒதுக்காமல் புதிதாக கட்சியில் வந்த தென்றல் குமார் என்பவருக்கு சீட்டு கொடுத்துள்ளார்கள். நாம் தமிழர் கட்சியில் இருந்து வந்த அவரை நான் தான் கட்சியில் சேர்த்தேன். அதனால் எங்கள் உரிமையை கேட்பதற்காக விஜய்யிடம் வந்திருக்கிறோம். எங்களுடைய உரிமையை விஜய் கேட்க வேண்டும். கேட்கும் வரை நாங்கள் இங்குதான் போராட்டம் பண்ணுவோம்'' என்றார்.




