SuperTopAds

வடக்கு – கிழக்கு கடலோர மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்பு.

ஆசிரியர் - Editor II
வடக்கு – கிழக்கு கடலோர மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்பு.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடலோர மக்களுக்கு நிலையான மாற்று வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய கடல்பாசி தொழில்துறை வளர்ச்சி குறித்து இந்தியாவில் நடைபெற்ற 7வது இந்திய சர்வதேச கடல்பாசி கண்காட்சி மற்றும் உச்சிமாநாட்டில் முக்கியமாக பேசப்பட்டது.

இம்மாநாட்டில் இலங்கை மற்றும் மாலைத்தீவுகளை பிரதிநிதித்துவப்படுத்தி கடல்பாசி துறை ஆலோசகர் குலேந்திரன் சிவராம் சர்வதேச குழு உறுப்பினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

ICAR-CMFRI, கோச்சியில் நடைபெற்ற இம்மாநாட்டில் “உலக கடல்பாசி நிலவரம் – பயிரிடல், புதுமை, செயலாக்கம், சந்தைப்படுத்தல் மற்றும் வழங்கல் சங்கிலி” என்ற தலைப்பில் உலக நிபுணர்கள் கலந்துரையாடினர்.

வடக்கு – கிழக்கின் வாழ்வாதார சவால்கள்

வடக்கு மற்றும் கிழக்கு கடலோரப் பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மீன்பிடி தொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் கடல் வெப்பநிலை உயர்வு, புயல் தாக்கங்கள், மீன் வளக் குறைவு, பொருளாதார நெருக்கடி ஆகிய காரணங்களால் பாரம்பரிய வாழ்வாதாரம் சவாலுக்கு உள்ளாகியுள்ளது.

இந்த நிலையில், கடல்பாசி வளர்ப்பு சுற்றுச்சூழல் நட்பு மற்றும் நிலையான மாற்று வருமான வழியாக உருவெடுத்து வருவதாக குலேந்திரன் சிவராம் குறிப்பிட்டார்.

2012 முதல் தொடங்கிய முயற்சி

இலங்கையில் 2012ஆம் ஆண்டு துடுப்பு (Raft) முறையில் ஆரம்பிக்கப்பட்ட Kappaphycus alvarezii பயிரிடல், 2018ஆம் ஆண்டிலிருந்து Monoline முறைக்கு மாற்றப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இது வெறும் சிறு அளவிலான திட்டமாக இல்லாமல், “Aqua Agriculture” எனப்படும் சமூக அடிப்படையிலான வாழ்வாதார முறைமையாக வளர்ந்துள்ளது. குறிப்பாக பெண்கள் தலைமையிலான குடும்பங்களுக்கு நிலையான வருமானம் கிடைக்க வழிவகுத்துள்ளது.

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இத்துறை திட்டமிட்டு விரிவுபடுத்தப்பட்டால், இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.

சவால்கள் மற்றும் அவசர தேவைகள்

கடல்பாசி வளர்ப்பில் கடல் வெப்பநிலை உயர்வு, உப்பு அளவு மாற்றம், பலத்த காற்று, புயல் தாக்கம் போன்றவை முக்கிய சவால்களாக உள்ளன. மேலும் Epiphytes தாக்கம், மீன் மேய்தல், உலர்த்தல் மற்றும் சேமிப்பு வசதிகள், போக்குவரத்து கட்டமைப்பு ஆகியவை மேம்படுத்தப்பட வேண்டிய துறைகளாகும்.

அரசாங்கம் திட்டமிட்ட கடல்பாசி மண்டலங்களை அறிவித்து, பயிற்சி, நிதி உதவி, செயலாக்க மையங்கள் மற்றும் ஏற்றுமதி இணைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தென் ஆசியா – அடுத்த வளர்ச்சி மையம்

உலகளவில் இந்தோனேசியா கடல்பாசி உற்பத்தியில் முன்னிலையில் உள்ளது; சீனா செயலாக்கத் துறையில் ஆதிக்கம் செலுத்துகிறது. எனினும், தென் ஆசியா மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் அடுத்த வளர்ச்சி மையமாக உருவெடுக்கக்கூடும் என்ற நம்பிக்கை அதிகரித்து வருகிறது.

“இலங்கை மூலப்பொருள் ஏற்றுமதியாளராக மட்டுமே இருக்கக்கூடாது. மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகள், செயலாக்கம் மற்றும் தொழில்மயமாக்கல் மூலம் உலக சந்தையில் இடம்பிடிக்க வேண்டும்,” என அவர் தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு கடலோர மக்களின் பொருளாதார மறுமலர்ச்சிக்கான ஒரு புதிய வாய்ப்பாக கடல்பாசி தொழில் உருவெடுத்து வருவதாக இம்மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது