SuperTopAds

மாணவியை மூர்க்கத்தனமாக தாக்கிய ஆசிரியர் - காயங்களுடன் மாணவி வைத்தியசாலையில் அனுமதி

ஆசிரியர் - Editor II
மாணவியை மூர்க்கத்தனமாக தாக்கிய ஆசிரியர் - காயங்களுடன் மாணவி வைத்தியசாலையில் அனுமதி

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா பகுதியில் பாடசாலை ஒன்றில், தரம் 08 இல் கல்வி கற்கும் மாணவியை ஆசிரியர் மிருகத்தனமாக தாக்கியதில் மாணவி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவிக்கு அடிகாயங்கள், உட்காயங்கள் ஏற்பட்டதுடன், கடும் வலியினால் தானாக சிறுநீர் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து தலைவலி, தலைச்சுற்று, குமட்டல் உள்ளிட்ட உடல்நலக் குறைபாடுகள் அதிகரித்து வருவதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.

குறித்த ஆசிரியர் வழக்கமாக பாடசாலையில் மாணவ, மாணவிகளுக்கு தொல்லை கொடுத்து, தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி வருவதாக  பாதிக்கப்பட்ட மாணவி கூறியுள்ளார். 

சம்பவ தினத்தன்று, பெற்றோரை குறிப்பிட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கன்னம் மற்றும் செவி பகுதிகளில் கடுமையாக தாக்கியதாகவும், பின்னர் தலையை பிடித்து மேசையில் மோதச் செய்து, முதுகுப் பகுதியில் முழங்கையால் தாக்கியதாகவும் மாணவி தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக வலி தாங்க முடியாமல் சிறுநீர் கசிவு ஏற்பட்டதாகவும், பாடசாலை முடியும் வரை அதே சீருடை மற்றும் பாதணியுடன் வீடு திரும்பியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்துள்ளார்.

பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவியிடம் பெற்றோர் விசாரித்த போது, சம்பவ விவரங்களை தெரிவித்ததுடன், ஏற்பட்ட காயங்களையும் காட்டியுள்ளார். 

இதனையடுத்து, மாணவியை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்துள்ளனர்.

பெற்றோரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், குறித்த ஆசிரியர் நானுஓயா பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.