SuperTopAds

உலக ஈர நில தினம் - யாழில் கண்டல் தாவரங்கள் நாட்டி வைப்பு

ஆசிரியர் - Editor II
உலக ஈர நில தினம் - யாழில் கண்டல் தாவரங்கள் நாட்டி வைப்பு

"ஈரநிலங்கள் மற்றும் பாரம்பரிய அறிவு - கலாசார பாரம்பரிய தந்தைக்காக கொண்டாடுதல் "எனும் தொனிப்பொருளில் சர்வதேச ஈர நில தினம் நேற்றைய தினம் திங்கட்கிழமை  கொண்டாடப்பட்டது.

அந்த வகையில் யாழ் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில், நல்லூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அரியாலை கிழக்கு ஈரநில பிரதேசத்தில் நிகழ்வுகள் நடைபெற்றன.

அதன் போது, விழிப்புணர்வு நடைபவனி நடைபெற்று, கண்டல் தாவர மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டதுடன், விழிப்புணர்வு உரைகளுடன் ஈர நில தினம் தொடர்பாகத் தயாரிக்கப்பட்ட வழிகாட்டல் கையேடுகளும் வழங்கி வைக்கப்பட்டன.  

இந்நிகழ்வில் , பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் கலந்து கொண்டு, கருத்துத் தெரிவிக்கையில்,

ஈர நிலங்கள் நீர் வளங்களைப் பாதுகாப்பதிலும், வெள்ள கட்டுப்பாட்டிலும், உயிரியல் பல்துறை பாதுகாப்பிலும் முக்கிய பங்காற்றுகின்றன 

இவற்றை நாம் பாதுகாக்க வேண்டிய அவசியம். இவ்வாறான பிரதேசங்களைப் பாதுகாத்து இயற்கைச் சமநிலையை பேணுவது முக்கியமானதாகும் என தெரிவித்தார்.

நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர், யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சுற்றாடல் பிரிவு பொலிஸார், யாழ் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர்கள், தெல்லிப்பளை யூனியன் கல்லூரி சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கதாரி மாணவர்கள், பாடசாலை சுற்றாடல் கழக முன்னோடி மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.