ஐடி சோதனையின் போது விபரீதம்: உயிரை மாய்த்த பிரபல தொழிலதிபர்!

ஐடி சோதனையின் போது தொழிலதிபர் சி.ஜே.ராய் உயிரை மாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தை பூர்விகமாக கொண்ட சி.ஜே ராய், ரியல் எஸ்டேட், திரைப்பட தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கால்பதித்துள்ள 'கான்ஃபிடன்ட் குழுமத்தின்' (Confident Group) நிறுவன தலைவர் ஆவார். இந்த குழுமம் கேரளா மற்றும் கர்நாடகாவில் ஆயிரக்கணக்கான வீடுகளை கட்டியுள்ளது.
மோகன்லாலின் பெரிய பட்ஜெட் திரைப்படமான காஸனோவா (2012) உட்பட சில மலையாள படங்களையும் தயாரித்துள்ளது. மேலும், மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் சில சீசன்களின் முதன்மை விளம்பரதாரராக இருந்துள்ளது.
வருமானத்திற்கு அதிகமான சொத்துகுவிப்பு மற்றும் வரிஎய்ப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த சில நாட்களாக பெங்களூருவுவில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் கேரள வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.
நேற்றும் சோதனை நடைபெற்ற நிலையில், மதியம் 3 மணிக்கு அலுவலகத்திற்கு வந்த சி.ஜே.ராய்யிடம் சில ஆவணங்களை சோதித்து கையெழுத்திடுமாறு கூறியுள்ளனர்.
அதன் பின்னர் தனது அறைக்கு சென்ற அவர் 3:10 மணியளவில் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியை வைத்து மார்பில் சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
துப்பாக்கி சத்தம் கேட்ட உடன் அவரது அறைக்கு சென்று ஊழியர்கள், உடனடியாக அவரை எச்.எஸ்.ஆர் லேஅவுட்டில் உள்ள நாராயணா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர். இது தொடர்பாக அசோக் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐடி அதிகாரிகள் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்பதை விசாரணை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். குடும்ப உறுப்பினர் புதிய குற்றச்சாட்டுகளை தெரிவித்தால் விசாரிக்க தயார் என தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகளின் அழுத்தத்தினாலே ராய் உயிரை மாய்த்து கொண்டதாகவும், அவரது மரணத்திற்கு காரணம் ஐடி குழுவினரே என வைட் கோல்ட் நிறுவனத்தின் உரிமையாளரான ராயின் சகோதரர் சி.ஜே. பாபு தெரிவித்துள்ளார்.
துபாயில் வசித்து வந்த ராயின் மனைவி மற்றும் 20 வயதான 2 குழந்தைகள், இன்று அதிகாலை பெங்களூரு வந்தடைந்துள்ளனர். ஐடி சோதனையின் போது பெரும் தொழிலதிபர் உயிரை மாய்த்துள்ள சம்பவம் தொழில் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




