வன்னியில் அதிகரித்துள்ள யானை- மனித மோதல்

வன்னியில் அதிகரித்துள்ள யானை மனித மோதல்களைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் து. ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
எங்கள் வாழ்வுக்கும் வளமான வாழ்வாதாரத்துக்கும் போருக்குப் பின்னரான காலத்தில் நிலவும் புதிய அச்சுறுத்தலாகவே காட்டு யானை – மனித மோதலை வன்னி நிலம் காண்கிறது.
தொடர்ச்சியாக ஒப்பரிய மனித உயிர்கள் யானை மோதலில் இறப்பது ஆழ்ந்த வேதனைக்குரியது.
கடந்த 17ஆம் திகதி சனிக்கிழமையன்று அதிகாலை முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட தேறாங்கண்டல் பகுதியில் வயல்காவலில் இருந்த பொன்முடி சுஜிந்தன் என்னும் 19 வயதான இளைஞன் காட்டுயானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
காட்டுயானை மோதலில் உயிரிழந்த இளைஞன் சுஜிந்தன் யானை மோதலில் உயிரிழக்கும் மற்றொரு நபர்.
கடந்த 2020-2024 வரையான காலப்பகுதியில் காட்டுயானை மோதலில் 739 மக்கள் உயிரிழந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2020-2024 வரையான காலப்பகுதியில் நால்வரும் (4) வவுனியா மாவட்டத்தில் 2022-2024 வரையான காலப்பகுதியில் பன்னிருவரும் (12) காட்டுயானை மோதலில் உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
கடந்த 2009ஆம் ஆண்டிற்கு முன்னர் வன்னியில் புலிகள் இருந்த போது வன்னிக்காட்டிலும் நாட்டிலும் இவ்வாறான காட்டுயானைகள், குரங்குகள் உள்ளிட்ட வனஜீவராசிகளின் அட்டூழியங்கள் இருந்திருக்கவில்லை.
குறிப்பாக சுற்றாடல் அமைச்சின் கீழ் காணப்படுகின்ற வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனவளத் திணைக்களம் என்பன மக்களின் காணிகளை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றன.
இருப்பினும் காணி அபகரிப்பில் காட்டுகின்ற அதே அக்கறையை வனஜீவராசிகள் திணைக்களம், காட்டுயானை - மனித மோதலைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் காட்டுவதில்லை.
இவ்வாறு அதிகரித்துள்ள யானை மனிதமோதல்களைக் கட்டுப்படுத்த சுற்றாடல் அமைச்சு வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஊடாக விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென இந்த உயரியசபையைக் கோருகின்றேன்.
எனவே சுற்றாடல் அமைச்சர் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களுக்கு வருகைதந்து துறைசார்ந்தவர்களுடனும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுடனும், மக்கள் பிரதிநிதிகளான எம்மோடும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இந்த யானை மனித மோதலைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் - என்றார்.




