இனவாதப் போக்குகள் எதுவும் நமது நாட்டில் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது - ஜனாதிபதி யாழில் உறுதி

இனவாதப் போக்குகள் எதுவும் நமது நாட்டில் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் 'முழு நாடுமே ஒன்றாக' நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
அன்று யுத்தம் காரணமாக தமது பிள்ளைகள் பற்றி பயந்து வாழ்ந்த வடக்கின் பெற்றோர்கள், இன்று போதைப்பொருள் காரணமாக தமது பிள்ளைகள் குறித்து அச்சத்துடன் வாழ வேண்டியுள்ளது.
போதைப்பொருளின் ஆபத்து எந்த இடம், எந்த பிரஜை, எந்த நகரம், எந்த கிராமம், ஏழை, பணக்காரன், சிங்களவர் அல்லது தமிழர் என்ற வேறுபாடு இல்லாமல் பரவுகிறது
நாட்டின் இளைஞர்களை இந்த அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான தேசிய செயற்பாடு பலமாக செயல்படுத்தப்படும் அது பின்வாங்கப்படும் ஒரு செயற்பாடாக இருக்காது
அதற்காக, "அனைவரும் ஒன்று சேர்ந்து நாடு முழுவதும் ஒரு பாரிய பாதுகாப்பு வளையமாக செயல்படுவோம்"
அதிகாரத்தை இழந்த இனவெறிக் குழுக்கள் சிறிய, சிறிய இடங்களில் இனவாதத்தை மீண்டும் தூண்ட முயற்சிக்கின்றன. அந்த இனவாதப் போக்குகள் எதுவும் நமது நாட்டில் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது
போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக பங்களித்த வட மாகாணத்தில் முப்படைகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளையும் பாராட்டுகிறேன் என மேலும் தெரிவித்தார்.











