SuperTopAds

சிறிதரன் பதவி விலக வேண்டும் - சுமந்திரன் விடாப்பிடி

ஆசிரியர் - Editor II
சிறிதரன் பதவி விலக வேண்டும் - சுமந்திரன் விடாப்பிடி

அரசியலமைப்பு பேரவையிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பதவி விலக வேண்டுமென பணிப்புரை வழங்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 

இந்நிலையில் உடனடியாக அவரை கட்சியிலிருந்து நீக்குவதென்ற தீர்மானம் எடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

வவுனியா, குருமன்காட்டில் அமைந்துள்ள தாயகம் அலுவலகத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றதைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார். 

இச்சந்திப்பு தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

 “அரசாங்கம் எல்லை மீள் நிர்ணயம் செய்த பின்னரே மாகாண சபைத் தேர்தலென்று கூறுவதை எம்மால் ஏற்க முடியாது. தேர்தல் முறை மறுசீரமைப்பானது ஒரு விடயமாகும். 

ஆனால் மறுசீரமைப்பு செய்யவில்லை என்பதற்காக தேர்தலை நடத்தாமல் இருப்பது ஏற்க முடியாத ஒரு விடயம். அதனை அரசாங்கத்துக்குச் சொல்லியிருக்கிறோம். அப்படிப் பார்த்தால் கடந்த இரு பாராளுமன்ற தேர்தல்களை நடத்தியிருக்க முடியாது.

எனவே தேர்தலை உரிய காலத்தில் நடத்துவது அடிப்படையான விடயமாகும். அரசாங்கமானது தேர்தலுக்கு முகங்கொடுக்க பயந்துகொண்டு மாகாண சபைத் தேர்தலை காலவரையின்றி பிற்போட்டுக்கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. 

முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்களென்று பகிரங்கமாக சவால் விடுக்கின்றோம். வடகிழக்கில் அரசின் செல்வாக்கு பாரியளவு சரிவடைந்துள்ளது. மக்கள் தெளிவடைந்துள்ளனர் எனத் தெரிவித்தார்.