மன்னார் மனிதப் புதைகுழி - சட்ட வைத்திய அதிகாரிக்கு வாய்ப்பூட்டு!
மன்னார் சதொச வளாகத்தில், மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைகுழி அகழ்வின் போது, இனிவரும் நாள்களில் புதிதாக அடையாளப்படுத்தப்பட்டு மீட்கப்படும் மனித எச்சங்கள் மற்றும் தடயப் பொருட்கள் குறித்து தகவல் வழங்க முடியாதென, விசேட சட்ட வைத்திய அதிகாரி ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தெரிவித்தார்.
இனிவரும் நாள்களில் புதிதாக அடையாளப்படுத்தப்படும் மனித எச்சங்கள் மற்றும் தடயப் பொருட்கள் சம்பந்தமாக தகவல் வழங்க முடியாத நிலை உள்ளதாகத் தெரிவித்த அவர், இனிவரும் நாள்களில் ஊடகவியளார்கள் மனித புதைக்குழிக்கு வருகைத் தந்து, புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவுகளை மோற்கொள்ளலாமெனவும் கூறினார். ஆனால், இது குறித்து தகவல் வழங்குவது குறித்து எதுவும் கூற முடியாத நிலை காணப்படுவதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் சதொச வளாகத்தில், இன்று, 54ஆவது தடவையாகவும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதுவரை 72 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அற்றில் 66 மனித எச்சங்கள் வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.இவ்வாறு மீட்கப்பட்ட எச்சங்கள் 440 பைகளில், இலக்கம் இடப்பட்டு பொதி செய்யப்பட்டு நீதிமன்றப் பாதுகப்பில் வைக்கப்பட்டுள்ளது.