நல்லூரில் முப்பதுக்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கமராக்கள்: யாழ். மாநகர சபையின் பிரதி ஆணையாளர்

ஆசிரியர் - Admin
நல்லூரில் முப்பதுக்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கமராக்கள்: யாழ். மாநகர சபையின் பிரதி ஆணையாளர்

நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்கு வருகை தரும் அடியவர்களின் நன்மை கருதி முப்பதுக்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கமராக்கள் ஆலயச் சூழலிலுள்ள பல்வேறிடங்களிலும் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவற்றினை ஒருங்கிணைத்துக் கண்காணிக்கும் பணி யாழ்.மாநகர சபையால் மேற்கொள்ளப்படுமெனவும் யாழ். மாநகர சபையின் பிரதி ஆணையாளர் அ. சீராளன் தெரிவித்துள்ளார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா இன்று வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாவதை முன்னிட்டு இவ்வருடப் பெருந்திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் விசேடமாகக் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய மஹோற்சவப் பெருவிழா தொடர்பான கலந்துரையாடல்கள் யாழ். மாநகர சபையில் நடாத்தப்பட்டுள்ளதுடன் பெருவிழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இம்முறை நல்லூர்க் கந்தசுவாமி ஆலய மஹோற்சவ காலப் பகுதியில் 600 இற்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இந்த வருடம் பிளாஸ்ரிக், பொலித்தீன் பாவனை முற்று முழுதாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கான மாற்றுப் பொருட்கள் பல்வேறு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு யாழ். மாநகர சபைக்கு வழங்கப்பட்டுள்ளன.

எனவே, பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனையைத் தவிர்த்து அதற்கு மாற்றீடான பொருட்களை ஆலயச் சூழலிலுள்ள தற்காலிக விற்பனை நிலையங்களில் பெற்றுப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கின்றோம். இந்த நடைமுறையை மீறுபவர்கள் மீது யாழ்.மாநகரசபையால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

வழமை போன்று ஆலயத்திற்குச் செல்லும் அனைத்து வீதிகளுக்கும் வீதித்தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் வீதித்தடைகளில் யாழ்.மாநகர சபை உத்தியோகத்தர்களும், பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆலயத்தை அண்டியுள்ள குடியிருப்பாளர்களின் நன்மை கருதி வழமை போலவே யாழ். மாநகரசபையால் அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவை கருதி உள்ளே வரும் வாகனங்களுக்கு வாகனங்களின் பெயர் குறிக்கப்பட்டு அனுமதி அட்டைகள் வழங்கப்படுகின்றன.

வழமை போன்று கழிவகற்றல் சேவை மற்றும் நீர் விநியோக சேவை என்பன மஹோற்சவ காலத்தில் 24 மணி நேர சேவையாக இடம்பெறும். மஹோற்சவ நாட்களில் காலையிலும், மாலையிலும் சுவாமி வெளிவீதி வலம் வரும் போது நீர் விசிறுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ்.மாநகர சபையின் உற்சவகாலப் பணிமனையொன்று ஆலயத் தெற்கு வீதியிலும் ஒருங்கிணைப்புக் காரியாலயம் பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திலும் இயங்கும். எனவே, பொதுமக்கள் தங்களுடைய தேவைகள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பாக குறித்த காரியாலயங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

இம்முறை ஆலயத்திற்கு வருகை தரும் அடியவர்களின் வாகனங்களுக்கான பாதுகாப்பு நிலையங்களில் துவிச்சக்கர வண்டிகளுக்குப் பத்து ரூபாவும், மோட்டார்ச் சைக்கிள்களுக்கு 20 ரூபாவும், தலைக்கவசமொன்றிற்குப் பத்து ரூபாவும் அறவிடுவதற்கு யாழ்.மாநகர சபையால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்திற்கு வருகை தரும் அடியவர்களுக்கான குடிநீர் வசதி மற்றும் மலசலகூட வசதி என்பன ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வழமை போன்றே வர்த்தக நிலையங்களுக்கான இடங்கள் விலைமனுக் கோரல் மூலம் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை வழங்கப்படாத அனுமதிகள் தொடர்பில் யாழ். மாநகர சபை பொருத்தமான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு