ரூ.9 லட்சம் கோடி வர்த்தக நோக்கம் - பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் புடின் உறுதி; முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

இந்தியா, ரஷ்யா இடையே ரூ.9 லட்சம் கோடிக்கு வர்த்தக இலக்கை எட்டுவது என்றும், தடையில்லாமல் எரிபொருள் சப்ளை செய்யவும் பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புடினும் உறுதி செய்தனர்.
இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான 23வது வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 2 நாள் அரசு முறைப் பயணமாக நேற்றுமுன்தினம் மாலை டெல்லி வந்தார்.
விமான நிலையத்திற்கு நேரில் சென்று பிரதமர் மோடி அவரை வரவேற்று, இரவு விருந்து அளித்தார்.
மேலும் அதை தொடர்ந்து நேற்று காலை ஜனாதிபதி மாளிகையில் அதிபர் புடினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மகாத்மா காந்தி நினைவிடமான ராஜ்காட்டில் மலர் வளையம் வைத்து புடின் மரியாதை செலுத்தினார்.
பின்னர் ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தலைவர்களும் தனித்தனியாகவும், பின்னர் அதிகாரிகளுடனும் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
குறித்த சந்திப்பின் முடிவில் இரு தலைவர்களும் கூட்டாகப் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்று கூட்டு அறிக்கையை வெளியிட்டனர்.
இந்த உச்சி மாநாட்டின் போது பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி மற்றும் விண்வெளி ஆகிய துறைகளில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புடின் இணைந்து செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்கள்.
அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: எனது நண்பர் அதிபர் புடின் மற்றும் இரு நாடுகளின் பிரதிநிதிகளே உங்கள் அனைவரையும் வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். 25 ஆண்டுகளுக்கு முன்பு, அதிபர் புடின் எங்கள் கூட்டாண்மைக்கு அடித்தளமிட்டார்.
மேலும் கடந்த 80 தசாப்தங்களில் உலகம் பல ஏற்ற தாழ்வுகளைக் கண்டுள்ளது.
இருப்பினும், இந்தியா-ரஷ்யா இடையேயான நட்பு ஒரு துருவ நட்சத்திரம் போல உள்ளது. இந்த உறவு பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இன்று, இந்த உறவை வலுப்படுத்த உதவும் அனைத்து காரணிகள் குறித்தும் நாங்கள் விவாதித்துள்ளோம்.




