டெல்லி செங்கோட்டை தாக்குதல்-ஃபரிதாபாத் பல்கலைக்கழகத்திலிருந்து 10 பேர் மாயம்

இந்திய தலைநகர் டெல்லி செங்கோட்டை (Red Fort) பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய மையமாக விசாரணைக் குழுக்கள் கருதும் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த அல்லது கல்வி பயின்ற சுமார் 10 பேரைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை இன்று (19) வெளியிட்டுள்ளன.
காணாமல் போனவர்களில் மூன்று காஷ்மீரிகள் அடங்குவதாகவும் அவர்களின் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹரியானா காவல்துறையின் கூட்டு நடவடிக்கையைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் தேடுதல் வேட்டை நடந்தப்பட்டபோது அவர்கள் காணாமல் போன சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்கள், கடந்த 10 ஆம் திகதி செங்கோட்டைக்கு வெளியே அமோனியம் நைட்ரேட் எரிபொருளுடன் கூடிய ஹுண்டாய் ஐ20 சிற்றூந்தை வெடிக்கச் செய்ததாக கூறப்படும் மருத்துவர்கள் குழுவின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிற்றூந்து வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். வாகனத்தின் மூலம் நிகழ்த்தப்படும் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்கள் மூலம் டெல்லியில் நடந்த முதல் தாக்குதல் இதுவாகும் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான ஜெய்ச்-இ-முகமது இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
குறித்த தாக்குதலில் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான வைத்தியர் ஷாஹினா சயீத் என்பவர், 'மேடம் சர்ஜன்' என்ற இரகசியப் பெயருடன், தாக்குதலுக்கு நிதியளிப்பதில் முக்கியப் பங்கு வகித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
செங்கோட்டை வெடிப்புக்கான விசாரணையின்போது கிடைத்த தகவல்களின்படி, அந்த குழுவின் தலைவர்கள் மேலும் பல தற்கொலைக் தாக்குதல்களுக்கு நிதியளிப்பதற்காக டிஜிட்டல் முறைகள் மூலம், குறிப்பாக சதாபே (SadaPay) போன்ற பாகிஸ்தானிய செயலிகள் மூலம், நிதி திரட்ட அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தில் அல்-ஃபலாஹ் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த மூன்று மருத்துவர்கள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் நிறுவுனர் ஜாவத் அஹமட் சித்திக்கி,பயங்கரவாத நிதியளிப்பு தொடர்பான குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.




